கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசின் கல்வித் துறை, 2007ம் ஆண்டு, அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
"உரிமைக்கு எதிரானது':
இதனால், பாதிப்புக்கு உள்ளான வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள், இந்த ஆணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "ரிட்' மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின், இரு நபர் அடங்கிய அமர்வு முன், மேல் முறையீடு செய்யப்பட்டு, விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், இடைநிலை ஆசிரியர் தேர்வு முறையானது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் உத்தரவிட்டது. கடந்த, 2008ம் ஆண்டில் பிறப்பிக்கப் பட்ட இந்த உத்தரவில், "தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர், மற்றொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 14, 16 - 2 மற்றும் 19 - 1 பிரிவுகளுக்கு எதிரானது. எனவே, ஒட்டுமொத்த மாநில அளவில் தான், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மேல் முறையீட்டு, சிறப்பு அனுமதி மனுவை அனுமதித்து, சுப்ரீம் கோர்ட், 2008ம் ஆண்டு, அக்டோபர், 28ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், அதிக காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியை நிரப்ப, தமிழக அரசுக்கு அனுமதியளித்தது. மேலும், ஒரு மாவட்டத்தில் தேர்வாகும் ஆசிரியர்கள், தன் சொந்த மாவட்டத்தில் தான் பணியிடம் வேண்டும் என்றோ அல்லது தன் சொந்த மாவட்டத்திற்கு இட மாறுதல் வேண்டும் என்றோ கோரக் கூடாது எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
7,000 பேர் நியமனம்:
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு, ஓர் அரசாணை பிறப்பித்து, மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 7,000 ஆசிரியர்களை நியமனம் செய்தது. அதில், 5,000 ஆசிரியர்கள், தங்களின் சொந்த மாவட்டங்கள் தவிர்த்து, தொலைதூர, பிற வெளி மாவட்டங்களில், எங்கெல்லாம் காலியிடங்கள் உள்ளதோ அங்கு பணியமர்த்தப்பட்டனர். இதில், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளைக் கொண்டிருந்தவர்கள், கருவுற்றிருந்த பெண்கள் என பலரும், தொலைதூரங்களில் ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால், அவர்கள் பெரும் சிரமத்தை அடைந்தனர். இந்நிலையில், கடந்த, 2009ம் ஆண்டு மத்திய அரசால், குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நல்ல தகுதியான கல்வி வழங்க வேண்டும் என்பதால், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தகுதி தேர்வு முறை:
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது; தகுதித் தேர்வு முறை நடைமுறை படுத்தப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேற்படி, 2009ம் ஆண்டு சட்டப்படி, தேவையற்றதாகி விட்டது. இதற்கிடையே, மேற்படி சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவால் பாதிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தனியாகவும், தாங்கள் சார்ந்த அமைப்புகளின் சார்பாகவும், தங்களையும் வழக்கின் தரப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, மேற்படி உத்தரவை ரத்து செய்ய வேண்டி, மனு செய்துள்ளனர். இந்த வழக்கு, விரைவில், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதிகள், எச்.எல்.கோகலே மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, பிற மாவட்டங்களில் பணியாற்றும், இட மாறுதல் வேண்டி, தகுதியிருந்தும் அவதியுறும் ஆசிரியர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment