ஆசிரியர்களுக்கு என்ன குறைச்சல், கை நிறைய
சம்பளம், காலாண்டு தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, அரையாண்டுத் தேர்வு
முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, முழு ஆண்டுத் தேர்வு முடிந்தால் ஒன்றரை மாத
விடுமுறை. கொடுத்து வைத்தவர்களய்யா.
பொதுமக்கள் பலருக்கும் இன்றைய
ஆசிரியர்களின் உண்மை நிலை தெரியவில்லை.
நண்பர்களே, ஆசிரியர் பணி என்பது, தற்பொழுது
கடினமானப் பணியாகிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்குப்
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே, நான் உட்பட, அவர்கள் அனைவருமே, மிகவும்
பாவப்பட்ட ஜென்மங்கள் என்றுதான் கூற வேண்டும்.
நண்பர்களே, நாமெல்லாம் மாணவர்களாய்
பயின்றபோது, ஆசிரியர்களுக்குப் பயந்தோம், உரிய மரியாதையினைக் கொடுத்தோம்,
அதனால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம்.
வகுப்பறையில் ஆசிரியர் கொலை. கல்லூரி முதல்வரை
மாணவர்கள் வெட்டிச் சாய்த்தனர். நம் நெஞ்சைப் பதறச் செய்த செய்திகள் இவை.
தற்பொழுது மாணவ, மாணவியரிடம் ஒழுக்கக் கேடு
அதிகரித்து விட்டது. ஆசிரியர்களால் அவர்களை, ஒரு எல்லைக்கு மேல் கண்டிக்க
இயலவில்லை. காரணம், மாணவனை அடித்தால் குற்றம். அடித்தால் மட்டுமல்ல, மாணவனின் மனம்
நோகுமாறு பேசுவது கூட தண்டனைக்கு உரிய குற்றம்.
மாணவன் விரும்பினால் ஆசிரியர் மேல் குற்றம்
சாட்டலாம். என் வகுப்பு மாணவி ஒருவர், ஒரு ஆசிரியையிடம், டீச்சர், படி படி
என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தீர்களேயானால், உங்கள் பெயரினை எழுதி
வைத்துவிட்டு, ஹாக்கி அறையில் தூக்குப் போட்டுக் கொள்வேன். பாவம் ஆசிரியர்கள்.
இதுதான் இன்றைய யதார்த்த நிலை.
காலாண்டு, அரையாண்டு விடுமுறை எல்லாம்,
இந்தக் கால ஆசிரியர்களுக்குக் கிடையாது. சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தியாக
வேண்டும். பள்ளிக் கூடம் மாலை 4.20 மணிக்கு நிறைவு பெற்றாலும், மாலை 6.00 மணி வரை
வகுப்புகள் நடத்தியாக வேண்டும். பள்ளியின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தியாக வேண்டும்,
அல்லது தேர்ச்சி சதவிகிதத்தைத் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். தினந்தோறும்
போராட்டம்தான்.
நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள்,
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவுற்றன. அடுத்த நாளில் இருந்தே தொடங்கிய, விடைத்தாள்
திருத்தும் பணி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இடையில் வந்த ஞாயிற்றுக் கிழமைகளில்,
பாராளுமன்றத் தேர்தலுக்கான சிறப்பு வகுப்புகள். ஆக விடுமுறையே இல்லை. ஏப்ரல் 23 ஆம்
தேதி, தேர்தல் பணிக்கான ஆணையினைப்
பெற்றுக் கொண்டு, வாக்குச் சாவடி நோக்கிப் பயணித்தோம்.
நண்பர்களே, நான், தஞ்சாவூர், ஒரத்தநாடு
சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பணிகொண்டான் விடுதி என்னும் சிற்றூரில்
அமைந்திருந்த வாக்குச் சாவடியில், வாக்குச் சாவடி முதன்மை அலுவலராக நியமிக்கப்
பட்டிருந்தேன்.
என்னைத் தவிர, அவ்வாக்குச் சாவடிக்கு
நியமிக்கப் பட்டிருந்த மூவரும் ஆசிரியைகள். வாக்குப் பதிவு நல்ல முறையில் அமைதியாக
நடைபெற்றது. ஆசிரியைகள் மூவரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.
வாக்குப் பதிவு முடிந்து, வாக்குப் பதிவு
இயந்திரத்தினைப் பெற, மண்டல அலுவலர், எங்கள் வாக்குச் சாவடிக்கு வந்த பொழுது, இரவு
மணி 2.00.
ஆசிரியைகள் மூவரும் தஞ்சை திரும்பியாக
வேண்டும். இரவு 2.00 மணிக்கு ஏது பேரூந்து. நான் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்ததால்,
எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் ஆசிரியைகளை பத்திரமாக அனுப்பியாக வேண்டுமே.