கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்து தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கூட்டுறவுத்துறை செயலாளர் இன்று அரசாணையை வெளியிட்டார்.
கூட்டுறவு சங்கங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான அசல், வட்டி, அபராத தொகை என அனைத்துமே தள்ளுபடியாக உள்ளது. கடந்த மார்ச் 16ம் தேதிக்கு முன்புவரை பெற்ற கடன்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி உத்தரவு பொருந்தும்.
தமிழக முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். இதை செயல்படுத்தும் வகையில்தான் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட உள்ள மொத்த கடன் மதிப்பு ரூ.5750 கோடி என்று கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்ற வழிகாட்டு நெறிமுறையும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்தான் இந்த அறிவிப்பால் பலனடைவார்கள் என்பதால், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபால் உள்ளிட்டோர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
மழை பொய்த்துப்போனது உள்ளிட்ட இயற்கை பாதிப்பு எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பையே ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது, 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது சரியில்லை என்பது இவர்கள் கருத்து. அதேநேரம், சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த உத்தரவு நலன் தரும் என்று அவர்கள் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment