scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 09, 2014

அரசு பள்ளிக்காக தங்களது சொந்த செலவில் வேன் வாங்கிய நல்”ஆசிரியர்கள்”

     ஆசிரியர்களுக்கு என்ன குறைச்சல், கை நிறைய சம்பளம், காலாண்டு தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, அரையாண்டுத் தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, முழு ஆண்டுத் தேர்வு முடிந்தால் ஒன்றரை மாத விடுமுறை. கொடுத்து வைத்தவர்களய்யா.

       பொதுமக்கள் பலருக்கும் இன்றைய ஆசிரியர்களின் உண்மை நிலை தெரியவில்லை.
      நண்பர்களே, ஆசிரியர் பணி என்பது, தற்பொழுது கடினமானப் பணியாகிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே, நான் உட்பட, அவர்கள் அனைவருமே, மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் என்றுதான் கூற வேண்டும்.
      நண்பர்களே, நாமெல்லாம் மாணவர்களாய் பயின்றபோது, ஆசிரியர்களுக்குப் பயந்தோம், உரிய மரியாதையினைக் கொடுத்தோம், அதனால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம்.
      வகுப்பறையில் ஆசிரியர் கொலை. கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிச் சாய்த்தனர். நம் நெஞ்சைப் பதறச் செய்த செய்திகள் இவை.
      தற்பொழுது மாணவ, மாணவியரிடம் ஒழுக்கக் கேடு அதிகரித்து விட்டது. ஆசிரியர்களால் அவர்களை, ஒரு எல்லைக்கு மேல் கண்டிக்க இயலவில்லை. காரணம், மாணவனை அடித்தால் குற்றம். அடித்தால் மட்டுமல்ல, மாணவனின் மனம் நோகுமாறு பேசுவது கூட தண்டனைக்கு உரிய குற்றம்.
      மாணவன் விரும்பினால் ஆசிரியர் மேல் குற்றம் சாட்டலாம். என் வகுப்பு மாணவி ஒருவர், ஒரு ஆசிரியையிடம், டீச்சர், படி படி என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தீர்களேயானால், உங்கள் பெயரினை எழுதி வைத்துவிட்டு, ஹாக்கி அறையில் தூக்குப் போட்டுக் கொள்வேன். பாவம் ஆசிரியர்கள். இதுதான் இன்றைய யதார்த்த நிலை.
     காலாண்டு, அரையாண்டு விடுமுறை எல்லாம், இந்தக் கால ஆசிரியர்களுக்குக் கிடையாது. சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தியாக வேண்டும். பள்ளிக் கூடம் மாலை 4.20 மணிக்கு நிறைவு பெற்றாலும், மாலை 6.00 மணி வரை வகுப்புகள் நடத்தியாக வேண்டும். பள்ளியின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தியாக வேண்டும், அல்லது தேர்ச்சி சதவிகிதத்தைத் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். தினந்தோறும் போராட்டம்தான்.
     நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவுற்றன. அடுத்த நாளில் இருந்தே தொடங்கிய, விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இடையில் வந்த ஞாயிற்றுக் கிழமைகளில், பாராளுமன்றத் தேர்தலுக்கான சிறப்பு வகுப்புகள். ஆக விடுமுறையே இல்லை. ஏப்ரல் 23 ஆம் தேதி,  தேர்தல் பணிக்கான ஆணையினைப் பெற்றுக் கொண்டு, வாக்குச் சாவடி நோக்கிப் பயணித்தோம்.
     நண்பர்களே, நான், தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பணிகொண்டான் விடுதி என்னும் சிற்றூரில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில், வாக்குச் சாவடி முதன்மை அலுவலராக நியமிக்கப் பட்டிருந்தேன்.
      என்னைத் தவிர, அவ்வாக்குச் சாவடிக்கு நியமிக்கப் பட்டிருந்த மூவரும் ஆசிரியைகள். வாக்குப் பதிவு நல்ல முறையில் அமைதியாக நடைபெற்றது. ஆசிரியைகள் மூவரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.
அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் திரு செந்தில் என்பவர் ஓர் இளைஞர். தேர்வு எழுதித் தேர்வானவர். நட்புடன் பழகி, வேண்டிய உதவிகளை, இன்முகத்துடன் செய்து கொடுத்தார்.
      வாக்குப் பதிவு முடிந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தினைப் பெற, மண்டல அலுவலர், எங்கள் வாக்குச் சாவடிக்கு வந்த பொழுது, இரவு மணி 2.00.
     ஆசிரியைகள் மூவரும் தஞ்சை திரும்பியாக வேண்டும். இரவு 2.00 மணிக்கு ஏது பேரூந்து. நான் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்ததால், எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் ஆசிரியைகளை பத்திரமாக அனுப்பியாக வேண்டுமே.
       மண்டல அலுவலரின் வாகனத்திலேயே அடுத்த வாக்குச் சாவடி வரை மூவரும் சென்றனர். நான் பின் தொடர்ந்தேன். திருவோணம் என்னும் ஊரின் பள்ளி அது. அப்பள்ளியில் நான்கு வாக்குச் சாவடிகள். இரவு மணி 2.30
     ஐந்தாறு கார்கள், காவல் துறை வாகனங்கள், ஜீப்புகள் என அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. மாருதி காருடன் நின்றிருந்த ஒருவரை அணுகி, தஞ்சைக்குச் செல்கிறீர்களா? என்றேன்.
ஆமாம் தஞ்சைக்குத்தான் செல்கிறேன் என்றார்.
இந்த மூன்று ஆசிரியைகளும் தஞ்சை சென்றாக வேண்டும். தஞ்சை வரை, இவர்களையும் தங்கள் காரில் அழைத்துச் செல்லலாமா? என்றேன்
சற்றும் தயங்காது, அதற்கென்ன அழைத்துச் செல்கிறேன் என்றார்.
       அவருக்கு நன்றி கூறி, ஆசிரியைகள் மூவரையும், காரில் அனுப்பி விட்டு, அங்கிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கந்தர்வக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து, புதுக்கோட்டை தஞ்சை சாலையில் 20 கிமீ பயணித்து, வீட்டிற்கு வந்தபொழுது ,அதிகாலை மணி 4.30.
       மூன்று நாட்கள் மட்டுமே ஓய்வு, 28.4.2014 முதல் பள்ளி அலுவல்.
      நண்பர்களே, உண்மைதான் 28.4.2014 திங்கட் கிழமை முதல் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும், தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறோம். விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு அல்ல.
     ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின், முழு ஆண்டுத் தேர்வு விடைத் தாட்களைத் திருத்தி ஆக வேண்டும், தேர்வு முடிவுகளை அறிவித்தாக வேண்டும்.
      மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்னர்தான், எங்களின் முக்கியப் பணியே தொடங்குகிறது. என்ன நண்பர்களே புரியவில்லையா? அடுத்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.
      நாமெல்லாம் சிறுவர்களாக இருந்த பொழுது, பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில், தெருவில் விளையாடுவோமே நினைவிருக்கிறதா நண்பர்களே.
     பளிங்கு, பம்பரம், கிட்டிப் பில், பட்டம், கபடி, கிரிக்கெட் என விளையாட்டுகளுக்கு ஒரு முடிவே கிடையாது. ஒரு தெருவிற்கு முப்பது நாற்பது சிறுவர்கள் இருப்பார்கள். அனைவரும் தெருவில்தான் இருப்பார்கள். தெருவே அதகளப்படும்.
     ஆனால் இன்று வீட்டிற்கு ஒரு சிறுவன், அதிகமானால் இரண்டு பேர். அவர்களும் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. தொலைக் காட்சியே சரணம் என்று முடங்கி விடுகிறார்கள். இன்று பல மாணவர்களுக்குத், தங்கள் தெருவில் இருக்கும் மற்ற மாணவர்கள் யார் என்பது கூடத் தெரியாது.
     நண்பர்களே, சொல்ல வந்த செய்தியை விட்டு விட்டேன். அதாவது நாம் சிறுவர்களாக இருந்த பொழுது, நம்மைப் போன்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அன்று இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையோ குறைவு.
      இன்றைய நிலை என்ன? இன்று பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு.
      அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். மாணவர்களை சேர்ப்பதற்கு பள்ளிகள் ஒன்றொடு ஒன்ற போட்டிப் போடும் நிலை. ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். 9மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.
     நண்பர்களே, பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள்தான் குறைவு. தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள், வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பார்கள் அல்லவா? அதைப் போலத்தான் நாங்களும், கையில் எமது பள்ளி குறித்த நோட்டீசுகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமம் கிராமமாக, ஒவ்வொரு தெருத் தெருவாக, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வருகிறோம். தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் என வேண்டி வருகிறோம்.


நண்பர்களே, யாருமே செய்யாத செயலை நாங்கள் செய்திருக்கிறோம். ஆம் நண்பர்களே, மாணவர்களின் வசதிக்காக, ஆசிரியர்களான நாங்கள் அனைவரும் சேர்ந்து, மாதத் தவனையில், ஒரு பெரிய வேன் வாங்கியிருக்கிறோம். ஓட்டுநர் ஊதியம், மாதாந்திரத் தவனைக் கட்டணம் மற்றும் இதரச் செலவினங்கள், என அனைத்தையும் நாங்களே செலுத்தி வருகிறோம். ஆசிரிய ஆசிரியைகள் அனைவரும், அலுவலகத்தார் உட்பட, அனைவரும் தங்களது மாத ஊதியத்தில் இருந்து, ஆயிரம் ரூபாயினை இதற்காக மனமுவந்து வழங்கி வருகிறார்கள்.
       பேரூந்து வசதி அதிகம் இல்லாதப் பகுதிகளுக்கு இந்த வேன் தினமும், காலை மாலை இரு வேளைகளிலும் செல்லும். கரந்தையில் இருந்து புறப்பட்டு, பள்ளியக்கிரகாரம், மணலூர், குளமங்களம், கூடலூர், குருங்களுர் வரை தினமும் 50 கிலோ மீட்டர் இவ் வேன் சென்று வருகிறது. மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை, முற்றிலும் இலவசம்.
     கடந்த 30.4.2014 அன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடைசி அலுவல் நாள். எனவே கரந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம்.
     ஏற்கனவே, எம் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று, 6 ஆம் வகுப்பிற்கும், 9 ஆம் வகுப்பிற்கும் செல்ல இருக்கும் மாணவர்களின், வீட்டு விலாசங்களைப் பெற்று, அவர்களின் விட்டிற்கும் சென்று, எங்கள் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
     எம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம், திரு ஜி.விஜயக்குமார், திரு எஸ்.சரவணன், திரு டி.பாபு, திரு ஜி.குமார், திரு ஜெ.கிருஷ்ணமோகன், திரு எஸ்.தனபால் மற்றும் நான் என ஒன்பது பேரும் ஒரு குழுவாகப் புறப்பட்டோம்.
     கரந்தை நகராட்சி நடுநிலைப் பள்ளி, பால சரசுவதி தொடக்கப் பள்ளி, பாரத் தொடக்கப் பள்ளி, கிருஷ்ணம் பப்ளிக் பள்ளி, வெண்ணாற்றங்கரை ஜவகர் தொடக்கப் பள்ளி, பள்ளியக்கிரகாரம் அரசு நடு நிலைப் பள்ளி என ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, அப்பள்ளியின் தலைமையாசிரியையைச் சந்தித்துப் பேசினோம்.

    
பின்னர் பள்ளியக்கிரகாரம் செல்வம் தேநீர் விடுதியில், தேநீர் அருந்தியவாறு சிறிது ஓய்வெடுத்தோம்.

     பிறகு பள்ளியக்கிரகாரத்தில் இருந்து ஐந்து கிமீ தொலைவிலுள்ள, வயலூர் என்னும் சிற்றூரில் உள்ள நல்லாயன் நடுநிலைப் பள்ளிக்குச் சென்றோம். நண்பகல் 12.30 மணியாகிவிட்டது. வெயிலோ அனலாய் தகித்தது.
     ஒரு மரத்தின் நிழலில் அனைவரும் கூடி, அடுத்து எங்கு செல்வது என்பது குறித்துப் பேசினோம். தலைமையாசிரியர் கூறினார், கரந்தையில் ஜைன இலவச நடுநிலைப் பள்ளிக்குச் செல்லாமல் வந்து விட்டோம், அப் பள்ளிக்குச் செல்வோம்.
     நண்பர்களே, பள்ளியின் பெயரைக் கேட்டவுடன், மனதில் ஓர் ஆயிரம் மகிழ்ச்சி மின்னல்கள். தகிக்கும் வெயில், குளிர் நிலவாய் மாறியது. ஆம் நண்பர்களே, உங்களின் ஊகம் சரிதான். நான் பயின்ற பள்ளி. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான் பயின்ற பள்ளி.

ஜைன இலவச நடுநிலைப் பள்ளியின் முன், இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கிப், பள்ளிக்குள் நுழைந்தோம்.
     பள்ளித் தலைமையாசிரியை மகிழ்வோடு எங்களை வரவேற்றார். அவருடன் பல நிமிடங்கள் பேசி முடித்த பின், பள்ளிக்குள் சென்று பார்க்க வேண்டுமே என்றேன். தாராளமாகப் பாருங்கள் என்றார். நான் பயின்ற பள்ளி இது. நாற்பதாண்டுகளுக்குப் பின், முதல் தடவையாக இன்றுதான் வருகிறேன் என்றேன். தலைமையாசிரியையின் முகத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.
     பள்ளிக்குள் சென்றோம். ஆசிரியைகள் அனைவரும் வரவேற்றனர். அன்று மாலை, அப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருந்தது. எனவே எங்கெங்கும் வண்ண வண்ணக் கொடிகள். மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். வணக்கம் ஐயா, வணக்கம் ஐயா எனச், சிறுவர் சிறுமியரின் குரல்கள் எங்களை வரவேற்றன.
     மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய், நான் பயின்ற பள்ளி இது. நாற்பதாண்டுகளுக்குப் பின், இப்பொழுதுதான் வருகிறேன். இன்று நான் ஒரு ஆசிரியர். இப் பள்ளியில் பயின்றதால், எனக்குக் கிடைத்தப் பதவி இது. நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பயின்று, உயர் நிலையினை அடைந்து, உங்களது பெற்றோருக்கும், நீங்கள் பயின்ற இப்பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றேன்.
      நிச்சயமாகப் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்போம் என மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒரே குரலில் உற்சாகமாய் உறுதியளித்தனர்.
      ஜைன இலவச நடுநிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு, திரும்பும் வழியில், நண்பர் ஒருவர் எதிரில் வந்தார்,
ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருகிறீர்களே, எதுவும் விசேசமா?
இல்லை நண்பரே, மாணவர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று வருகிறோம்.
ஓ, பிள்ளைப் பிடிக்கப் போறீங்களா..

1 comment: