ஈரோடு: பழைய, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, முழுமையாக இடித்து அகற்ற, கலெக்டர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இம்மாவட்டத்தில், ஈரோடு, கோபி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள சில பள்ளிகளில், பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடங்கள் உள்ளன. இவை, தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. எந்த நேரத்திலும், இடிந்து விழக்கூடும் என்ற ஆபத்து உள்ளது.
மேலும் சில பள்ளிகளில், பழமையான கட்டிடங்களை இடிக்காமல், பயன்பாடு ஏதுமின்றி விட்டு வைத்துள்ளனர். இதுபோன்ற கட்டிடங்கள் பலத்த மழை, இடியோசை, வெடி சத்தத்தின்போது முற்றிலும் இடிந்து கீழே விழும் என்ற அபாயம் காணப்படுகிறது. அவ்வாறான சமயங்களில் உயிர், உடமைக்கு இழப்பு ஏற்படும் அவலம் தொடர்கிறது.
எனவே, பழமையான, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றி, புதிதாக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது வேறு ஏதேனும் நிதி மூலம், புதிதாக கட்டிடம் கட்டி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள், பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஃபோன், புகார் மனு, பேக்ஸ் மூலமாகவும், நேரடியாகவும் புகார் அளித்து உள்ளனர். பழமையான, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்களால், தங்கள் குழந்தைகளை அனுப்புவது குறித்து பெற்றோர்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கலெக்டர் பிரபாகரன் கூறியதாவது: 25 நாட்களாக பழமையான, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பி.டி.ஓ.,க்கள், இதுகுறித்து ஆய்வுசெய்து, தங்கள் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், தகுதியற்ற கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு என்பது முக்கியம். விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். அதேசமயம் விரைந்து பணியாற்ற வேண்டும், என்றார்.
கலெக்டர் உத்தரவால், பழமையான, பயன்பாட்டுக்கு தகுதியற்ற பள்ளி கட்டிடங்கள், விரைவில் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்படும். அங்கு புதிதாக கட்டிடம் கட்டப்படும், என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment