சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது.
தனியாருக்கு எது?
குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன.
மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளை மூட விரும்பாத மாநகராட்சி நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதற்காக, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய மாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பள்ளி கட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு, மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.
நிர்வாகம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளை, பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு செலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எந்தெந்த பணிகள்?
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.நகர்., திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.
கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை நடத்த உள்ள நிறுவனங்கள் விரும்பும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது?
சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணை வெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க பகுதி பள்ளிகள் பரிதாப நிலையில் உள்ளன. அரசு கல்வித்துறையை காட்டிலும், மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதி பள்ளிகளை, மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
No comments:
Post a Comment