பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல்
28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு
வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால்,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் 55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள்.
இதற்கிடையே, பார்வையற்ற மாற்றுத் திறனாளி
ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு
ஏற்கெனவே அறிவித்திருந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) மூலமாக பிரத்யேக பயிற்சி அளிக்கவும் அரசு
ஏற்பாடுசெய்துள்ளது. 40 நாட்கள் கொண்ட இந்த பயிற்சியில் சேருவதற்கு
விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பார்வையற்ற பட்டதாரி
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு
நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான
விண்ணப்ப படிவங்கள் மார்ச் 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிகளின் அலுவல கங்களில் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.50.
சிறப்பு தகுதித்தேர்வுக்கு மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு
தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் (தாள்-2)
நடத்தப்படுகிறது. பொது வாக, ஒரு தேர்வு, சிறப்பு தேர்வாக நடத்தப் படும்போது
அதில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
குறைக்கப்படும். ஆனால், பார்வையற்ற ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள இந்த
சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது பற்றி ஒன்றும்
தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment