ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில்
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை
ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து
செய்ய வேண்டும்; அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து
செய்ய வேண்டும்; பகுதிநேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை
உயர்த்த வேண்டும்; கல்வித் துறை அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருகிற 25-ஆம் தேதி
கருப்புப் பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி உள்ளிருப்பு போராட்டமும்,
26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென முடிவு
செய்யப்பட்டது.
இதேபோல, பதவி உயர்வுக்காக காத்திருக்கும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஆசிரியர்
பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு
உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-ஆம் தேதி
ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment