ஒரு சொத்து வாங்குவதற்கு முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து
விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு இ.சி. எனப்படும் வில்லங்க சான்று
(Encumbrance Certificate) அவசியமாகிறது. அதில் சொத்தின் சர்வே எண், இதற்கு
முன் அந்த சொத்தை வாங்கியவர், விற்பனை செய்தவர் யார்? அவர்களுக்கிடையே
நடந்த ஒப்பந்தம், அது பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவு எண், சொத்தின்
மதிப்பு, பதிவு செய்யப்பட்ட அடமான விவரம், கிரய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய
விவரங்கள் இருக்கும் என்பதால் சொத்து எந்தெந்த வருடம் யார் யாரால்
வாங்கப்பட்டு இருக்கிறது? என்ற முழு விவரமும் தெரிந்து விடும்.
அதனால் இ.சி. எனப்படும் வில்லங்க சான்றிதழ் மூலமே தாய் பத்திரத்தில்
இருந்து யாரிடம் சொத்து வாங்குகிறோமோ? அதுவரை உள்ள பத்திரங்கள், ஆவணங்களை
சரிபார்த்து விடலாம் என்பதால் இ.சி. தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அந்த இ.சி.யை பெற விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.
விண்ணப்பிப்பது எப்படி?
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ?
அந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து வில்லங்க சான்றிதழ் பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கு அந்த சொத்தின் சர்வே எண், சொத்தின் உரிமையாளர் பெயர்,
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்க்கப்போகிறோம் என்ற தகவல்கள் மிக
முக்கியம். விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பவர் பெயர், முகவரி, சொத்து விவரம்,
கிரய பத்திர விவரங்கள் உள்பட சொத்து பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு
இருக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்து அத்துடன் விண்ணப்ப கட்டணத்தை
செலுத்த வேண்டும்.
1987–ம் ஆண்டுக்கு பிந்தைய சொத்து விவரங்கள் அடங்கிய இ.சி.யானது,
கம்ப்யூட்டர் மூலம் கொடுக்கப்படுவதால் விரைவாக கிடைத்து விடும். அதற்கு
முந்தைய ஆண்டுகளுக்குரிய இ.சி. தேவைப்பட்டால் அது பற்றிய ஆவண பதிவுகளை தேடி
எடுக்க வேண்டி இருக்கும் என்பதால் இ.சி. கிடைக்க சில நாட்கள் ஆகும்.
இணையதளம் மூலமும் பெறலாம்
1987–ம் ஆண்டுக்கு பிந்தைய இ.சி.யை இணைய தளம் மூலமும் பெறலாம். அதற்கான இணைய தள முகவரி: http://www.tnreginet.net. இணையதளத்தில்
இ.சி. பெறும் வசதி எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்ற விவரம்
குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் தமிழில் வில்லங்க சான்று பெற http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1 என்றும், ஆங்கிலத்தில் வில்லங்க சான்று பெற http://www.tnregi-net.net/igregn/webAppln/EC.asp?tam=0 என்றும் சொடுக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இணையதளம் வழியாக விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ
இ.சி. கொடுக்கபடும். அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பனை செய்வதற்காக பதிவு செய்யாமல்,
யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் செய்து இருந்தாலோ, சொத்தை
யாரிடமாவது அடமானம் வைத்து அது பதிவு செய்யப்படாமல் இருந்தாலோ அது
இ.சி.யில் வராது. ஆகவே இ.சி.யில் விண்ணப்பித்து சொத்து விவரங்களை
பெற்றாலும் இதுபோன்ற விஷயங்களையும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment