சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி
அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை
ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.
அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து
யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில்
சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு
வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு
வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு
வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி
2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட
அந்தஸ்தை ரத்து செய்த தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து
உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசுப் பணியில்
சேர்ந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததை ரத்து
செய்யவில்லை. அதனால் அரசை ஏமாற்றி உள்ளார் என அதிகாரிகள் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் போது, அரசுப் பணியில்
சேர்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மேலும், 1979-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவி பெறும்
பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிய காலத்தை, தேர்வு நிலை ஆசிரியராக அந்தஸ்து
வழங்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து வழங்கி 7 ஆண்டுகள் கழித்து
அதை ரத்து செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், தொடக்கக் கல்வி
அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரிடம் இருந்து பணம்
திரும்பப் பெற்றிருந்தால் அதை அவரிடம் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது என
அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment