கிராமத்து ஏழை மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க இலவசமாக, 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைத்து தந்த, நாகப்பன்: நான், சிவகங்கையை சேர்ந்தவன். அஞ்சல் துறையில் வேலை கிடைத்து, மதுரையில் வசிக்கிறேன். உலக பொதுமறையான திருக்குறளின் மீதுள்ள பற்றால், ஏழு அஞ்சல் ஊழியர்கள் இணைந்து, 'திருக்குறள் ஊழியம்' என்ற அமைப்பை உருவாக்கினோம்.
ஆரம்பத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பொது சேவையும் செய்து வந்தோம். மேலும், கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு, நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்களை இலவசமாக வழங்கினோம். கடந்த ஆண்டிலிருந்து, தமிழக அரசே இப்பொருட்களை இலவசமாக வழங்கி வருவதால், எங்கள் கல்வி சேவையில் மாற்றம் கொண்டு வர சிந்தித்தோம். மதுரை, உசிலம்பட்டி அருகில் உள்ள, கட்டளைமாயன்பட்டி கிராமத்தில், பள்ளிக்கூடம் இல்லை. எனவே, 2006ல், ஊர் மக்களே பணம் திரட்டி, 40 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி, 'அனைவருக்கும் கல்வி திட்டம்' மூலம், அங்கு, துவக்க பள்ளியை அமைத்ததுடன், கட்டட வேலையையும் ஊர்
மக்களே செய்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த அவ்வூர் மக்களுடன் இணைந்து, நாங்களும் பல பணிகள் செய்தோம். அப்போது தான், தனியார் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் வசதியை, நாம் ஏன், கிராமத்து அரசு பள்ளிகளில் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே, கட்டளைமாயன்பட்டி பள்ளி லைமையாசிரியரிடம், எங்கள் எண்ணத்தை கூறியதும், அவரும் உதவ முன் வந்தார். சில தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, அவ்வாறே, இந்த அரசு பள்ளியிலும் ஸ்மார் கிளாஸ் தொழில்நுட்பத்தை அமைத்தோம். இதனால், தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறைந்தது. எங்களை போன்று மற்றவர்களும், தங்கள் அருகே உள்ள அரசு பள்ளிகளில், தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்தால், பல ஏழை கிராமத்து மாணவர்களின் கல்விக்கு உதவியாக இருக்கும்.
தொடர்புக்கு: 94420 62991
No comments:
Post a Comment