இந்த விழாவில் மாணவ, மாணவிகளை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயம் என்பதை தொழிலாக அல்லாமல், அது ஒரு கலாசாரம் என்ற வகையில் இந்த பள்ளி செய்வது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
ஒவ்வொரு மாணவர்களும் தனித்துவத்துடன் இருக்க வேண்டும். நான் இதுவரை ஒன்றரை கோடி மாணவர்களை சந்தித்து உள்ளேன். அவர்கள் தனித்துவத்துடன் இருப்பதாக என்னிடம் கூறினார்கள். மாணவர்கள் உயர்ந்த எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
அதை நிறைவேற்ற விடா முயற்சி, தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைக்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு தினமும் புத்தகம் படிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் மாணவர்கள் தொட்டு விட்டு விட்டு விடக்கூடாது.
அதை முடிக்கும் வரை அயராது முயற்சி செய்ய வேண்டும். தோல்வியால் துவண்டு விடக்கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை துணிவுடன் சந்திக்க வேண்டும். தாய்–தந்தை, மற்றும் ஆசிரியர்கள் நமக்கு வழிகாட்டிகள் ஆவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதில், நாம் விஞ்ஞானத்தில் மேன்மேலும் வளர ராக்கெட் தயாரிப்பு அவசியம். இந்தியாவை இந்தியர்கள் ஆள தொடங்கி 60 ஆண்டுகளை கடந்து உள்ளோம். இது போன்ற சூழ்நிலையில் ராக்கெட் தயாரிப்பில் ஈடுப்பட்டால் தான் நாடு உயரும்.
மாணவர்கள் படிக்கும் போது அரசியலில் ஈடுபட வேண்டாம். படித்து முடித்து அரசியலில் ஈடுபடலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.
தற்போது பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. நதிநீர் இணைப்பு, சாலை கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு நிறைய பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பொறியியல் படிப்பை மாணவ, மாணவிகள் தொடர்ந்து படிக்கலாம்.
இவ்வாறு அவர் மாணவர்களின் கருத்துக்கு அப்துல் கலாம் பதில் அளித்தார்.
முன்னதாக பள்ளியின் சார்பில் பரம்பரை வித்யதான் என்ற நூலை வெளியிட்டு, பள்ளியின் இச்சேவை திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவிற்கு பள்ளி தாளாளர் சனத்குமார் தலைமை வகித்தார். மாணவன் விக்னேஷ்குமார் வரவேற்றார்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் ஸ்ரீவள்ளி, ஏடிஸ்பி ராஜன், டிஎஸ்பிக்கள் சந்தானபாண்டியன், கண்ணப்பன், ஒருங்கிணைப்பாளர் பென்னேஸ்வரன் விளக்கினார். நிகழ்ச்சிகளை 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீ தேவி தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி தக்ஷிணபிரியா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment