முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான
தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று
ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதுகலை ஆசிரியர் பணி
மதுரை கோ.புதூரை சேர்ந்தவர்
விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில்
அச்சுப்பிழை இருந்தது.
எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு
கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும்
வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, இதுபோன்று
ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்து இருப்பதற்காக அதிகாரிகள்
வெட்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு
நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அர்த்தம் மாறும் வகையில் இல்லை
விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு
வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி
இருந்ததாவது:-
“தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும்
தேர்வுகளுக்காக தயாரிக்கப்படும் கேள்விகள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற
அச்சகங்களில் மிகவும் ரகசியமாக தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும்
கேள்வித்தாள்கள் தேர்வு தினத்தன்று தான் பிரித்துப் பார்க்கப்படும். அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. அச்சகத்தில்
கேள்வித்தாளை உருவாக்கும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், கேள்வித்தாளில்
ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. யார்
அச்சடிக்கிறார்களோ, அவர்கள் தான் எழுத்துப்பிழைக்கு முழு பொறுப்பாவார்கள். கேள்வித்தாளில்
உள்ள எழுத்துப்பிழை சம்பந்தமாக ஆராய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கேள்விகளில் எழுத்துப்பிழை இருந்த போதிலும், அதன்காரணமாக கேள்விகளின் அர்த்தம்
மாறும் வகையில் இல்லை. புரிந்து கொண்டு எழுதும் அளவுக்கு தான் கேள்விகள் உள்ளன
என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, கருணை மதிப்பெண் கொடுக்க முடியாது.
முதல் 10 ரேங்குகளை பெற்றவர்களில் 6 பேர் ‘பி’ சீரியல் கொண்ட கேள்வித்தாள் மூலம்
தேர்வு எழுதி உள்ளனர். மறுதேர்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
பாதிக்கப்படுவர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.”
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு
இருந்தது.
கடமை
அதன் பின்பு விசாரணை நடந்தது.
விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொழி, தங்கம்மாள்
ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். விசாரணையின் போது நடந்த விவாதம் வருமாறு:-
கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- பிரிண்டரில்
ஏற்பட்ட கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது.
நீதிபதி:- பிரிண்டர் கோளாறு காரணமாக
பிழை ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. ஒரு தேர்வை நடத்தும் போது
கேள்வித்தாளில் எந்தவித குளறுபடியும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாளை தயார் செய்து
தேர்வை சரியாக நடத்த வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடமை. பிரிண்டர்
கோளாறு காரணமாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படலாமா?.
அதிருப்தி
தேர்வு தொடங்கியதும் கேள்வித்தாளில்
தவறு இருப்பதை பார்த்து ½ மணி நேரத்துக்குள் அத்தனை தேர்வு மையங்களுக்கும் பிழையை சரி செய்து
கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கலாமே?. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்
தேர்வில் உள்ள குளறுபடி குறித்து ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, ஐகோர்ட்டு தனது
கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து தவறு
நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக இந்த கோர்ட்டு
உத்தரவிட்டும் அவர் ஏன் வரவில்லை?
கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- முக்கிய
வேலை காரணமாக அவரால் வர இயலவில்லை.
நீதிபதி:- பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி வழங்கவே நாங்கள்(நீதிபதிகள்) இங்கு இருக்கிறோம். இது முக்கியமான வேலை இல்லையா?.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதன்பின்பு, “இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கருத்தை அறிய இந்த கோர்ட்டு விரும்புகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நாளை(18-ந் தேதி) நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment