விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த கலெக்டர்.
ஈரோடு, சத்தியமங்கலம் வாவிபாளையத்தை சேர்ந்தவர், பிரவீன், 25. திருப்பூர் ஓடக்காடு பகுதியில் உள்ள, தனியார் நிறுவன ஊழியர். பார்சல் ஒன்றை கூரியர் அனுப்புவதற்காக, பிரவீன், பைக்கில் வந்தார். திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே, நிலை தடுமாறி, கீழே விழுந்தார். இதில், பிரவீனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் துடித்த அவரை பார்த்த சிலர், உடனடியாக, "108' அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
நீண்ட நேரமாகியும், ஆம்புலன்ஸ் வரவில்லை. அவ்வழியாக, காரில் வந்த கலெக்டர் கோவிந்தராஜ், சாலையில், பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து, காரில் இருந்து இறங்கி வந்து, விசாரித்தார். ஆம்புலன்ஸ் வர தாமதமாவதை அறிந்த அவர், தலையில் பலத்த காயமடைந்த பிரவீனை, உடனடியாக தன் காரில் ஏற்றுமாறு கூறினார். பின், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர், பிரவீனை, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கலெக்டரின் நடவடிக்கையை பார்த்து, பொதுமக்கள் அவரை பாராட்டினர்.