தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான நிதி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளே, சிக்கலையும் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து நடத்தப்படும் பயிற்சிகளால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிரமம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளிகள், 293 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துவக்கப்பள்ளிகள், பல உள்ளன. அவர்களில், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு கட்டாயமாக செல்ல வேண்டியுள்ளது; இதனால், மற்றொரு ஆசிரியர் மட்டுமே, அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி, பாதுகாக்க வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. பயிற்சிக்கு கட்டாயம் 3 ஆசிரியர்கள் செல்ல வேண்டிய இருப்பதால், எஞ்சிய ஆசிரியர்கள், அனைத்து வகுப்புகளையும் கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பயிற்சி தொடர்வதால், முதற்கட்ட பயிற்சியில் ஈடுபாடு காட்டும் ஆசிரியர்கள், நாளடைவில் ஆர்வம் காட்டு வதில்லை. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "பயிற்சி பெறுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையே பயக்கும். இருப்பினும், பயிற்சி பல நாட்களுக்கு தொடர்வதால், பாட வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இறுதி கட்டத்தில், அவசர அவசரமாக அவற்றை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. "பாடங்களை தவிர, இதர பதிவேடுகளையும், ஆசிரியர்களே பராமரிப்பது போன்ற பணிகளால், வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பயிற்சிகளை கல்வித்துறை திட்டமிட வேண்டும்,' என்றார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment