தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பின், பிளஸ் 2 மதிப்பெண்களை குறியாக வைத்தே, தனியார் பள்ளிகளில் பயிற்சியளிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கள் பள்ளியில் படிக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்தியும், தேர்ச்சி விகிதத்தை காட்டியுமே, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.
இப்பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தேர்வு முடிவுகளில், தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை சரிவதை தொடர்ந்து, சில ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறை அரசு பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், படிப்பில் சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, பள்ளி பாட நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் பயனாக, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதே போல், நன்கு படிக்கும் மாணவர்களையும் கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்த நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், 10ம் வகுப்பில், 450 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பில், 950 மதிப்பெண்ணுக்கு மேல், அதிகமாக எடுத்தவர் பட்டியல் தயாரிக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு தனிக் கவனம் கொடுத்து, சிறப்பு வகுப்பு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில், அரசுப்பள்ளி களின் தேர்ச்சிச் சதவீதம் அதிகரித்தது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் பலர் மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் பட்டியலில், இடம் பெற்றனர்.
இதற்கு, மாணவர்களை அவர்களின் கற்றல் திறனுக்கேற்ப பிரித்து, பயிற்சியளித்ததும் முக்கிய காரணம். அதையடுத்து, ரேங்க் ஹோல்டர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியல், பள்ளி வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர்களை அடையாளம் கண்டு, தேவையான வசதி செய்து கொடுத்து, அதிகபட்ச மதிப்பெண் எடுக்க வைக்க, தற்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் புதிய உத்தரவால், பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவரின் தேர்ச்சி சதவீதம், மேலும் அதிகரிக்கவும், அரசு பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவம், தொழில்நுட்ப கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment