scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 06, 2014

காவல் துறையில் 14,623 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்
அளித்து பேசியதாவது:– 


காவல் துறையினருக்கு 8 மணி நேர பணி நிர்ணயிக்க வேண்டுமென்ற கோரிக்கை இங்கே வைக்கப்பட்டது.

காவல் பணி என்பது நேரம் வரையறுக்கப்பட்டு செய்யும் பணி அல்ல. ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப் படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உறுப்பினர் பேசுகின்றபோது, என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் காவலர்கள், காவல் துறையினர், தங்கள் குறைகளைத் தெரிவிக்க முகாம்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அத்தகைய முகாம்கள் ஏதும் நடத்தப்படவில்லை. நான் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காவல் துறையினரை வரவழைத்து அவர்கள் என்ன குறைகள் இருந்தாலும், என்ன புகார்கள் இருந்தாலும், என்ன மனுக்கள் கொடுக்க விரும்பினாலும் என்னிடம் கொடுக்கலாம் என்று பல நாட்கள் காவல் துறையினரைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய மனுக்களைப் பெற்று உயர் அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைத்தேன்.

அதன் பின்னர், முகாம்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இது வரைமுறை செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை தங்கள் மேலதிகாரியிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாவட்டங்களில் காவல் துறையினர் தங்கள் குறைகளை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் கொடுக்கிறார்கள். ஆணையரகங்களில் அந்தந்த கமிஷனரிடம், காவல் துறையினர் தங்கள் புகார்களையும் குறைகளையும் தெரிவிக்கிறார்கள். இது முறையாக நடந்து வருகிறது. மாதத்தில் ஒரு நாள் உயர் அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் காவல் துறையினரிடம் கேட்டு மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காவல் துறையில், காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் தேர்வு செய்யப்பட்டு, காவலர் பயிற்சி பள்ளி மற்றும் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியளிக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காலிப் பணியிடங்கள் குறித்து முன்னதாகவே கணக்கெடுக்கப்பட்டு, அப்பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவுகளை உரிய நேரத்தில் பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அளிக்கப்பட்டு, தேர்வாணையம் உரிய அறிவிப்புகள் செய்து முறையாக தேர்வுகளை நடத்தி தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து, காவல் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2012ம் ஆண்டு, 12,162 காவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் காவல் துறை சரிபார்ப்பு பணிகள் முடித்து 11,488 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அனைவரும் பயிற்சி முடித்து அந்தந்த நகரங்கள்–மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

ஆயுதப் படை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஏழு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நான்கு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் அந்தந்த மாவட்டங்கள்– அணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும், இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கு 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு, 13,078 ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் 180 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், 886 உதவி ஆய்வாளர்கள், 277 தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் 202 விரல்ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1,365 உதவி ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

ஆகவே, நான்கு ஆண்டுகளாக உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தவறான கூற்று.

இவ்வாறு காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பிவரினும், மாநிலத்தில் காவலர் எண்ணிக்கையின் விகிதம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினருக்கு காவல் பணிகளில் உதவியாக இருக்கும் வகையில், “தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை” ஒன்றை அமைக்க நான் உத்தரவிட்டதன் பேரில், 9,079 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 12.2.2014 அன்று முதல் ஒரு மாதகால அடிப்படை பயிற்சி முடித்து, தற்போது பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது, காவல் துறையில் பல்வேறு பதவிகளில் 20,506 காலிப் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவற்றுள் 14,623 காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய அரசு உத்தரவிட்டு, அக்காலியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மீதமுள்ள 5,883 காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்காக மாவட்டங்களிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றால், மக்கள் அத்தகைய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று பொருள் அல்ல. இங்கே தாராள மனதுடன், உண்மையான ஜனநாயகக் கோட்பாட்டின்படி யார் போராட்டம் நடத்த விரும்பினாலும், அவர்களுக்கு அனுமதியைத் தருகிறோம். இதுவே மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அனுமதியே தருவதில்லை. ஆகவே, இதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை உறுப்பினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாநிலத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், பொதுநலப் பிரச்சனைகளுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும், அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் இயக்கங்களை அமைத்து சம்பந்தப்பட்டவர்களை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாமலோ அல்லது அவற்றை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும் போதிலோ, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி அப்பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்கின்றனர். அரசு நிர்வாகம் தலையிட்டும் பிரச்சினைகள் முடிவுக்கு வராத போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாயிற் கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற அமைதியான மக்கள் இயக்கப் போராட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி தேவையான பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

எனவே, அமைதியான சூழ்நிலையில் நடக்கும் மக்கள் இயக்கப் போராட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதில்லை.

அமைதியான போராட்டங்களை கைவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதம், சாலை மறியல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், நிர்வாகத்தினரை தொழிற்சாலைகளுக்குள் செல்லவிடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பொது அமைதி சீர்குலைய வாய்ப்பிருந்தால் மட்டுமே காவல்துறையினர் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி தர உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு நிச்சயமாக பங்கம் ஏற்படும் என்று காவல் துறையினர் முடிவு செய்யும் சமயங்களில் மட்டுமே போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே, உரிய கால அவகாசத்துடன் பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் எவ்வித மக்கள் இயக்கங்களுக்கும் காவல் துறையினர் அனுமதி மறுப்பதோ அல்லது இழுத்தடிப்பதோ கிடையாது.

போலீஸ் ஆய்வுக் குழுவின் வருடாந்திர அறிக்கையின்படி, 2012ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது அகில இந்திய அளவில் நடைபெற்ற போராட்டங்களில் 4ல் ஒரு பகுதி ஆகும். கேரளாவில் 781 போராட்டங்களும், மேற்கு வங்கத்தில் 1901 போராட்டங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரமே போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக்கும்.

அதே சமயத்தில், உறுப்பினர் சொன்னதை வைத்து நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இருபத்தோராயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன என்றால் தமிழகத்தில் ஜனநாயகம் நல்ல முறையில் தழைத்தோங்குகிறது என்று பொருள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment