தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு
தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.
அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.
இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment