ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்
தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11)
வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய
விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி
ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும்
தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில்
2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.
முதல் தாள் தேர்வுக்கான முக்கிய
விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த
திருத்தமும் செய்யப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்
மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர்
5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு
முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்
இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை
எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்
இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது.
அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு
செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர்
தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க
நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள
சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்:
நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து
வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித்
தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின்
திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக,
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின்
திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு
வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment