லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரல், 12 வரை, நடத்தப்படுகிறது. பார்கோடு எண் கடந்த ஆண்டுகளில், தேர்வு முடிந்து, ஒரு மாதத்துக்குள் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தற்போது, தேர்தல் வரவுள்ளதால், முன்கூட்டியே விடைத்தாள் மதிப்பீடு செய்து முடிக்கும் வகையில், தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பார்கோடு எண் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுவதால், டம்மி எண் போடுவதற்கான முகாம்கள், முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்ததும், விடைத்தாள்கள், மதிப்பீடு செய்ய அனுப்ப முடியும்; அதிகபட்சம், 15 நாட்களுக்குள் அனைத்து விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்துவிட முடியும், என்ற நிலை உருவாகியுள்ளது.
15 நாட்களுக்குள் :
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வில், பலவித அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர், அக்டோபர் தேர்வில், 15 நாட்களுக்குள் தேர்வு முடிவு தயாராகி விட்டது. தற்போது, அதிக மாணவர்கள் தேர்வெழுதினாலும், அதற்கேற்ப ஆசிரியர்களை பயன்படுத்தும் போது, 15 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் தயாராகி விட வாய்ப்பு உள்ளது. தேர்வுப்பணிகள், தேர்தலால் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு அறைக்கு செல்லும் ஆசிரியர் முதல், மதிப்பீடு செய்யும் ஆசிரியர் வரை, அனைவரையும், அரசு தேர்வுகள் இயக்குனரகமே தேர்வு செய்ய உள்ளது. நிர்வாக ரீதியாகவும், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு, புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கும். இவ்வாறு, அந்த அலுவலர் கூறினார்.
No comments:
Post a Comment