யுனைடெட் இந்தியா நிறுவனம் : தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற,
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து,
இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மக்கள் செலுத்த வேண்டிய பிரிமியம்
தொகையை, அரசு செலுத்தி விடும். இதனால், ஏழை, எளிய மக்கள், தனியார்
மருத்துவமனைகளிலும், காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடிகிறது. இதற்கு,
மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு
அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது;இது முழுமை அடையவில்லை. இதனால், அவசர
சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அடையாள அட்டை இல்லாவிட்டாலும், ரேஷன் கார்டு
மற்றும் வருமானச் சான்று கொடுத்து, உரிய சிகிச்சை பெறும் வகையில், ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த நடைமுறையை, காப்பீட்டு நிறுவனம் கைவிடுகிறது.
டிச.,15ம் தேதி முதல், அரசின் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை
இல்லாவிட்டால், சிகிச்சை பெற முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,
இதுவரை அடையாள அட்டை பெறாதோர், சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என,
தெரிகிறது. கலெக்டர் அலுவலகம் : இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி
ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் பெரும்பான்மையானோருக்கு, மருத்துவக்
காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இதுவரை, காப்பீடு அட்டை பெறாதோர், கலெக்டர் அலுவலகத்தில், இதற்காக
அமைக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சென்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள
அட்டை பெற்றுக் கொள்ளலாம். டிச., 15க்குப்பின், அடையாள அட்டை
இல்லாவிட்டால், இத்திட்டத்தில் சிகிச்சை பெற இயலாது. யாருக்கும் சிகிச்சை
தரக்கூடாது என்பது நோக்கமல்ல; எல்லாரும் மருத்துக் காப்பீட்டு அட்டையை
முறையாக பெற வேண்டும்; பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம். இவ்வாறு, அவர்
கூறினார். நீட்டிக்கப்படுமா?
தமிழகத்தில், பொதுமக்கள் இன்னும் முழுமையாக மருத்துவக் காப்பீடு அட்டை
பெறாத நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு பொதுநல
அமைப்புக்களும் வலியுறுத்தி உள்ளன.
No comments:
Post a Comment