பனி பூத்த அதிகாலை. தன் சிறகைத் துடுப்பாக்கிக் கடக்கும் பறவைகள். குக்கூ
குழந்தைகள் நூலகத்துக்கு வேகமாக எட்டு வைக்கும் சின்னஞ்சிறிய பாதங்கள். இசை
கருவி கொம்பு முழங்கி அடங்கப் பறை திகுதிகுவென அதிர்கிறது. குழந்தைகள்
பனைக் கீற்று கிரீடம் அணிவித்து வரவேற்பு தர, சமூகப் போராளி நம்மாழ்வார்
அள்ளியணைத்து உச்சிமுகர்கிறார்.
குழந்தைகளோடு குழந்தைகளாக நம்மாழ்வார் ஆடிப்பாட மனது லேசாகிறது
குழந்தைகளுக்கு. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி குக்கூ குழந்தைகள்
நூலகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவைப் பனை மர விழிப்புணர்வு விழாவாகக்
கொண்டாடி மகிழ்ந்தனர் குழந்தைகள்.
பனை ஓலையால் ஆன கலைப் பொருட்கள், குழந்தைகள் இலக்கியம், 3 கோடியே 60 லட்சம்
மரக் கன்றுகளை நட்டு வைத்துப் பூமிக்கு மருதாணி பூசிய ஆப்பிரிக்காவின்
வங்காரி மாத்தாய் எனக் கிட்டத்தட்டக் குழந்தைகளால் வடிவமைக்கப்பட்ட கலைப்
பொருள் களஞ்சியமாகவே தெரிகிறது.
பள்ளிக் குழந்தைகள் பனை குறித்த விவாதம் செய்யும் ஆரம்ப நிகழ்ச்சியே பெரும்
வியப்பு. குழந்தைகள் பேசப் பேசப் புதுப் புது விஷயங்கள் வந்து விழுகின்றன.
பனங்கருப்பட்டிக்கும், வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரைக்கும் உள்ள
வித்தியாசத்தை அழ காக அடுக்குகிறார்கள். நம் அமர்ந்தி ருக்கும் நிழல் ஏதோ
ஒரு பறவையின் எச்சமாகவோ அல்லது யாரோ ஒரு மனிதனின் உன்னத உழைப்பால் இன்று
நாம் இளைப்பாறுகிறோம் என்று குழந்தைகள் பேசியதைக் கேட்டு, சிலாகித்துப்
பாராட்டினர் நம்மாழ்வார்.
நாம் அற்பமாக நினைக்கும் பொருட்களை வைத்துக் குழந்தைகளின் படைப்பாற்றலை
வளர்த்தெடுக்கும் அளப்பரிய ஆற்றலோடு இந்த நூலகத்தைச் செதுக்கியுள்ளனர்.
குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய உணவான பதநீரும், நுங்கு மற்றும் கம்பங்கூழும்
காலை உணவாக வழங்கப்பட்டன.
ஊத்துக்குளி தாலி கட்டிப்பாளை யம் குக்கூ நூலகத்தில் தொடங்கிக் குழந்தைகள்
நடைபயணம் ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களைச் சுற்றி வலம்
வந்தன.
குக்கூ நண்பர்களுடன் பேசியபோது, ’’குழந்தைகள் சந்திப்பதற்கான ஒரு இடம்தான்
நமது நூலகம். ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த
விஷயங்களைப் படைப்பாகச் செய்கிறார்கள். அருகில் ஒரு விதை நாற்றுப் பண்ணை
இருக்கு. அதைப் பரமரிப்பதும் அவர்கள்தான். இங்கு எளிய மனிதர்களின்
வாழ்க்கையைக் குழந்தைகள் அவர்களாகவே அறி கிறார்கள். அவர்களுக்குச் சிலம்பப்
பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றனர்.
நடைபயணத்துக்கிடையே சற்றே இளைப்பாறியபடி அனுபவத்தைக் குழந்தைகள் மொழியில்
பகிர்ந்துகொண்டார் நம்மாழ்வார்: “உலக நாடுகள் எல்லாம் தமிழரோட வாழ்க்கை
முறையை வியந்து பார்க்குறாங்க. நம்ம குழந்தைகளுக்கு இருக்குற அறிவோட ஆற்றலை
நினைச்சு பெருமைப்படுறாங்க. வெளி நாட்டுல விளையாட்டுப் பொருள் வாங்க
ஆயிரக்கணக்கில் செலவு செய்யணும். ஆனால், நாம்தான் பனம்பழத்தைச் சாப்பிட்டு
அதன் எச்சத்தை வண்டியாக்கிக் குழந்தைகளை விளையாட வைக்கிறோம்.
லவ் பேர்ட்ஸுக்கு காக்கை எந்த விதத்திலும் குறைந்ததில்லை. அதை இந்தக்
குழந்தைகள் சொல்லும்போது ரொம்ப பெருமையா இருக்கு. உணவுங்கிற பேர்ல நிறைய
விஷத்தைச் சாப்பிடுவதால் நிறைய மருத்துவமனைகள் வந்துடுச்சு. சனி நீராடுன்னா
ஒன்பது கோள்களில் சனிதான் குளிர்ச்சி. குளிர்ந்த நீரில் குளி என்பதுதான்
அதன் அர்த்தம்.
‘ங’ப்போல் வளைந்து சமூகத்தோடு வாழும் வாழ்வு அடுத்த தலைமுறைக்கானது. அதை
இந்தக் குழந்தைகளிடம் பார்க்கிறேன். இந்தக் குழந்தைகளை எதிர்காலச்
சமூகத்தைக் கட்டமைக்கும் தவமாக நான் பார்க்கிறேன்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை குக்கூ அமைப்பின் அழ கேஸ்வரி, ஸ்டாலின், முத்து உள்பட ஏராளமானோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment