சென்னை : சென்னை யில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்டவைகளை வீடியோவில் படம் பிடித்து நேரடியாக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தலைமையிட துணை கமிஷனர் சரவணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது:
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும் இடங்களில் நடைபெறும் காட்சிகளை போலீஸ் கேமராமேன் பதிவு செய்வார். அந்த காட்சிகளை கமிஷனர் ஜார்ஜ் நேரடியாக பார்வையிட்டு அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பார். முதல்கட்டமாக போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு மூன்று கேமராக்களும், சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு மூன்று கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளது. கமிஷனர் உத்தரவுப்படி 200 ரோந்து வாகனங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளை கமிஷனர் நேரடியாக பார்க்கலாம். கமிஷனர் உத்தரவின்பேரில் மற்ற அதிகாரிகளும் இதை பார்த்து உத்தரவு பிறப்பிக்கலாம்.
போலீசாருக்கு 2700 கேமராக்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் கூடுதல் கேமராக்கள் விரைவில் வாங்கப்பட உள்ளது என்றார்.
முன்னதாக விமான நிலையம், ஸ்பென்சர் பிளாசா, போர் நினைவு சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம், அமெரிக்க தூதரகம், அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து போலீசார் எடுத்த வீடியோ காட்சிகளை நேரடியாக காட்டி பத்திரிகையாளர்களுக்கு துணை கமிஷனர் சரவணன் விளக்கம் அளித்தார். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, 54 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமிஷனர் நேரடியாக பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளிடம் கண்டிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் கூடி நின்று பேசிக் கொண்டு இருந்தனர். பணி செய்யாமல் அவர்கள் பேசிக் கொண்டு இருந்த காட்சியை கமிஷனர் ஜார்ஜ் பார்த்து கோபம் அடைந்தார். உடனடியாக வாக்கி டாக்கியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கூப்பிட்டு கண்டித்தார்.
அதன்பிறகுதான் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு, நிகழ்ச்சியை கமிஷனர் நேரடியாக( பரீட்சார்த்த முறையில் ஏற்படுத்தப்பட்ட வசதி) பார்த்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதேபோல் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு டோஸ் விழுந்தது.
No comments:
Post a Comment