இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது
ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன்
90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.
அதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர
ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ.
17,165 மட்டுமே தொடக்க ஊதியமாக வழங்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு
பள்ளிகளின் ஆசிரியர்களை விட மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதம்
சுமார் ரூ.10,000 குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே விதமான பணியை
செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இருவேறு
ஊதியம் வழங்கப்படுவது சரியல்ல. இது மாநில அரசு ஆசிரியர்களுக்கு
செய்யப்படும் துரோகம் ஆகும்.
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையக்
கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு
போராட்டங்களை நடத்தியும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை. ஆறாவது
ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு
ஆலோசனை வழங்க அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு
அமைக்கப்பட்டது. ஆசிரியர்களின் குறைகளை களைய வேண்டிய அக்குழு, ‘‘ இடைநிலை
ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் பணியாற்றுகின்றனர்; அங்கு
விலைவாசி குறைவாக இருப்பதால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
அளிக்கத் தேவையில்லை’’ என்ற அதிமேதாவித்தனமான பரிந்துரையை அரசுக்கு
அளித்தது. அரசும் அதையேற்று ஊதிய உயர்வு அளிக்க மறுத்தது. ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகக் கூறி
ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தக்
கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவான பணி
மூப்பு கொண்ட சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஏழாவது ஊதியக் குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்ட
நிலையில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை
களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர
வேண்டும். ஓய்வுக்காலத்தை ஆசிரியர்கள் நிம்மதியாக கழிக்கும் வகையில் புதிய
ஓய்வூதியக் கொள்கையை கைவிட்டு, பழைய ஓய்வூதியக்கொள்கையை கடைபிடிக்க
வேண்டும். மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் 6 மடங்கு
உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டையும் இப்போதுள்ள ரூ. 2
லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர்
மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
court only solve the problem
ReplyDelete