13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட
அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளார்கள்.
திருச்சி மாவட்டத்தில்தான் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை
தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில்
நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.
13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த
காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள்
உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி
மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த
காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், பெண்ணின் வயதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், திருமணத்தை எக்காரணம் கொண்டும் பதிவாளர் அலுவலகங்கள் பதிவுசெய்தல்
கூடாது என்றும், திருமணத்திற்கான பத்திரிக்கையை
அச்சடிக்கும் அச்சகங்கள், மணப் பெண்ணிற்கான தகுந்த வயது
சான்றிதழ் காட்டப்படாமல், அச்சடிக்கக் கூடாது என்றும் மாவட்ட
அளவில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவைதவிர, மாணவிகள் எளிதாக தங்களின் புகார்களை தெரிவிக்கும் வகையில், பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளி மாணவிகள் மத்தியில் சிறார் திருமணம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச உதவி தொலைபேசி எண் 1098 பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
No comments:
Post a Comment