சென்னை: "அங்கீகாரம் இல்லாமல்
செயல்படும் பள்ளிகளின் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வை எழுத முடியாது என, தேர்வுத்துறை இயக்குனர், திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார். எனவே, அங்கீகாரம்
இல்லாத பள்ளிகள் பிரச்னை குறித்து, தமிழக அரசு, விரைந்து
முடிவெடுத்து, அங்கீகாரம் வழங்க வேண்டும்" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: நர்சரி, பிரைமரி
பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, இரண்டும் சேர்த்து, 4,000 பள்ளிகள்
வரை, அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இடப் பிரச்னையை காரணம் காட்டி, மெட்ரிகுலேஷன்
பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரு ஆண்டுகளாகவே, அங்கீகாரம்
இல்லாமல், இயங்கி வரும் நிலை உள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, பள்ளிக் கல்வி
முன்னாள் இயக்குனர், தேவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, பொது மக்களிடம்
விசாரணை நடத்தியது. இதன் அறிக்கை,
இன்னும், தமிழக அரசிடம், சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையே, "அங்கீகாரம் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ,
மாணவியர், வரும் பொதுத்தேர்வை எழுத அனுமதிக்க
முடியாது" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியுள்ளார். இதனால், அங்கீகாரம்
இல்லாத பள்ளிகள் மீதான பிரச்னையில்,
தமிழக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரச்னைக்குரிய பள்ளிகள் அனைத்தும், பல ஆண்டுகளுக்கு
முன் துவங்கப்பட்டவை என்பதால், புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து, அங்கீகாரம்
வழங்க, அரசு முன்வர வேண்டும். இதை வலியுறுத்தி, வரும், 30ம் தேதி, 2,000த்திற்கும்
மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள்,
தலைமைச் செயலகத்தில், முதல்வர்
தனிப்பிரிவு அலுவலகத்தில், கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார்
கூறினார்.
மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள்
கூறுகையில், "அறிக்கை தயாராகி விட்டது. எனினும், அடுத்த வாரத்தில், மீண்டும்
ஒருமுறை கூடி, அறிக்கையை இறுதி செய்ய உள்ளோம். இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை
சமர்ப்பித்து விடுவோம்" என தெரிவித்தன.
இந்த விவகாரத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் எதிர்காலம் சம்பந்தபட்டிருப்பதால், பள்ளிகளில், பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர், பெரும் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, இந்த பிரச்னையை தீர்ப்பதில், தமிழக அரசு முன்னுரிமை தர வேண்டும் என்பது, பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:
Post a Comment