நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு
வினாத்தாளிலும், அதற்காக தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட விடைத்தாளிலும்
தவறுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக ஆசிரியர்
தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில் நடந்தது. முதல் நாள்,
ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கும்; இரண்டாம் நாள், பி.எட்.,
முடித்தவர்களுக்கும் தேர்வு நடந்தது. இவை, இரண்டிலும் லட்சக்கணக்கானோர்
பங்கேற்று தேர்வெழுதினர். இதில், இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாளிலும்,
அதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாளிலும் தவறுகளும்,
முரண்பாடும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி தகுதித் தேர்வில்,
ஏழு வினாக்கள் முரண்பாடாக கேட்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரிவில்,
குமரகுருபரின் காலம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 17ம் நூற்றாண்டு
என்பது சரியான விடை. அதுவே விடைத்தாளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,
ஏழாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், அவருடைய காலம், 16ம் நூற்றாண்டு
என்றும், எட்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டு என்றும்
கொடுக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலை அறிவியல் பகுதியில், மரபுசாரா ஆற்றல்
மூலத்துக்கு எடுத்துக்காட்டு என்ற கேள்விக்கு, கொடுக்கப்பட்ட அனைத்து
பதில்களுமே சரியான விடை என, புத்தகத்தில் உள்ளது. ஆனால், வெளியிடப்பட்ட
விடைத்தாளில், சூரிய ஆற்றல் மட்டுமே சரியான விடை என, கொடுக்கப்பட்டுள்ளது.
இது போல், ஏழு முரண்பாடான கேள்விகள், முதல் தாளில் உள்ளன.
அதே போல் பி.எட்., தகுதித் தேர்வுக்கான, சி
டைப் வினாத்தாளில், குழந்தை மேம்பாடு மற்றும் கருத்துக்கள் பிரிவில்,
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் போது, அறிதிறன் அமைப்பில் முக்கியமான
மாற்றங்களை ஏற்படுத்தும் முறை என்ற கேள்விக்கு, முதல் விடையும், மூன்றாவது
விடையும் சரியானது. ஆனால், தேர்வு வாரியம் வெளியிட்ட விடையில், நான்காவதாக
கொடுக்கப்பட்டதே சரியான விடை என கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பிரிவில், 68வது கேள்விக்கு
கொடுக்கப்பட்ட சரியான பதில், இலக்கண முறைப்படி தவறாக உள்ளது. 66வது
கேள்வியில் இலக்கண பிழை உள்ளது. அதனால், இரண்டு விடை கேள்விக்கு
பொருத்தமாகிறது.கணக்கு மற்றும் அறிவியல் பிரிவில், 133வது கேள்விக்கு, "சி"
விடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு "ஏ" என்பதும் சரியான விடை.
120வது கேள்விக்கு, "ஏ"வும், "சி"யும் சரியான விடை. ஆனால், தேர்வு வாரியம்
வெளியிட்ட விடைத்தாளில், "சி" மட்டுமே சரியானது என, கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு "ஏ" என்பதும் சரியான விடை என, பிளஸ் 2 புத்தகத்தில் உள்ளது.
தமிழ்ப் பிரிவில், 50வது கேள்வியில், "பி"
சரியான விடை என, கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், "சி" என்பதும் சரியான விடை
என்று, எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்ப் புத்தகத்தில் உள்ளது. ஆசிரியர் பட்டயப்
பயிற்சி தகுதித் தேர்வில், ஏழு முரண்பாடான கேள்விகளும், பி.எட்., தகுதித்
தேர்வில், 11 கேள்விகளும், பதில்களும் முரண்பாடாக உள்ளது. இதை ஆசிரியர்
தேர்வு வாரியம் கவனத்தில் கொண்டு, முரண்பாடான கேள்விகளுக்கு, சரியான
பதில்களுக்கும் மதிப்பெண் அளிக்க வேண்டும் என தேர்வில் பங்கேற்றோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த முறை நடந்த தகுதித் தேர்வில், ஒரு
மதிப்பெண் முதல், 10 மதிப்பெண் வரை, குறைவாக பெற்றவர்கள், தேர்ச்சி பெறும்
வாய்ப்பை இழந்து, ஆசிரியர் பணியையும் இழந்துள்ளனர். அதே போல் இம்முறை
நடக்காமல் இருக்கும் வண்ணம், முரண்பாடான கேள்விகளுக்கு, முறையாக ஆசிரியர்
தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
No comments:
Post a Comment