ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு
வழித்துணையாக..... என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல்.
காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது
காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும்
நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில்
நீராடுவதும் தனிசுகம்.
ஆடியின் சிறப்பு:
புரட்டாசி,
ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும்.
ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம் ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது?
மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை
என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை
ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி
கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில்
காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால்
நிரம்பும். ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள்
நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு
வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவின் முக்கிய
குறிக்கோள். ஆன்மிகரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி
அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்கரையோ
மக்கள் கொண்டாடுகின்றனர்.
வந்தாள் காவிரித்தாய்:
சிவனின்
மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன், பார்வதி
திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்தது. இதனால், அகத்திய முனிவரை "தென்புலம்
சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனைத் திருமணம்
செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது, கையில் ஒரு
மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம்
வழங்கினாள் பார்வதிதேவி. அவரும் அந்தப் பெண்ணைக் கமண்டலத்தில் அடக்கி
தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே
காவிரியானது. கமண்டலத்தில் மீதிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று,
தான் வசித்த பொதிகை மலையில் கொண்டு விட, அதுவே தாமிரபரணியானது.
இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி. திருச்சி
மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவனின் குடவரைக்கோயில் ஒன்றுள்ளது.
இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும்,
பக்கத்திலேயே பார்வதி தேவி நின்ற கோலத்தில் இருப்பதையும், தேவகணங்கள்
சுற்றி இருப்பதையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. "ஏற்கனவே சடைமுடியில்
இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்கத்திலேயே
ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டு விடக் கூடாது' என்ற கவலையில்
பார்வதிதேவி நின்ற படியே காவல் இருக்கிறாராம். சிவபெருமானின் மனைவியாக
கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாக கருதப்படுகிறாள். குணசீலம்
வரை அகண்ட காவிரியாகவும், குணசீலத்தை அடுத்த முக்கொம்பில் காவிரி,
கொள்ளிடம் என இரு ஆறுகளாகவும் பிரியும் காவிரி, மீண்டும் கல்லணையில்
ஒன்றிணைகிறாள். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை வணங்கும்
விதத்தில் ஸ்ரீரங்கத்தீவுக்கு மாலை அணிவிக்கும் விதத்தில் காவிரியும்,
கொள்ளிடமுமாக வளைந்து செல்கிறாள். பழம்பெருமை மிக்க இந்த நதிகளெல்லாம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடுவதின்
நோக்கம்.
காவிரி பாயும் பகுதிகள்:
காவிரி
நதி, கர்நாடகாவில், குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவேரி எனும் பகுதியில்
உற்பத்தியாகிறது.இது கடல் மட்டத்திலிருந்து 4,400 அடி உயரத்தில்,
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காவிரி, கர்நாடக மாநிலத்தில் 320
கி.மீ , தமிழ்நாட்டில் 416 கி.மீ., இரு மாநில எல்லையில் 64 கி.மீ., என
மொத்தம் 800 கி.மீ., தூரம் ஓடுகிறது. இது மைசூர், கொள்ளேகால், மேட்டூர்,
திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இதன் துணை நதிகளாக கர்நாடகாவில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்சுமண
தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி மற்றும் தமிழகத்தில் பவானி,
அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளும் உள்ளன. கிருஷ்ணராஜசாகர் (45 டி.எம்.சி.,),
கபினி அணை (19 டி.எம்.சி.,), ஹேமாவதி அணை (34 டி.எம்.சி.,), ஹேரங்கி அணை (6
டி.எம்.சி.,), மேட்டூர் அணை (93.50 டி.எம்.சி.,), மேலணை, கல்லணை, கீழணை
ஆகியவை காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளாகும். பல தடுப்பணைகளும்
உள்ளன. காவிரி, கர்நாடகாவில் சிவசமுத்திர அருவி, தமிழகத்தில் ஒகேனக்கல்
அருவி ஆகிய இரு அருவிகள் வழியே பாய்கிறது.தமிழகத்திற்கு
ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்தடையும் காவிரி, அங்கு ஸ்டான்லி
நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்து தமிழக காவிரி பாசனம்
தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானியில், பவானி
ஆறும்,ஈரோடு கடந்தபின் கொடுமுடி அருகே நொய்யல் ஆறும், கரூர் அருகே கட்டளை
எனும் இடத்தில் அமராவதி ஆறும் சங்கமிக்கின்றன. கரூரிலிருந்து திருச்சி வரை
வரும் காவிரி அகலமாக காணப்படுவதால் இங்கு "அகண்டகாவிரி' எனப்படுகிறது.
முசிறி, குளித்தலையை கடக்கும் காவிரி, முக்கொம்பு எனும் பகுதியில் மேலணையை
அடைகிறது. இங்கிருந்து கொள்ளிடம், காவிரி என இரு கிளை நதிகளாக பிரிகிறது.
கொள்ளிடம், வெள்ள வடிகாலாக இருப்பதால், பெரும்பாலும் இது வறண்டே
காணப்படும். இரு கிளைநதிகளுக்கும் இடையே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கும்
காவிரி, பின் கல்லணையை அடைகிறது. இங்கிருந்து பல சிறு கிளைகளாக பிரிந்து,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி பின் கடலில்
கலக்கிறது. காவிரி டெல்டாவில் பாயும் கிளைநதிகள் அரசலாறு, வெண்ணாறு,
வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகியவை. தமிழகத்தில் 34 சதவீதம்,
கர்நாடகாவில் 18 சதவீதம், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்புகள் காவிரி
டெல்டாவில் உள்ளன. தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி, காவிரி
நீரால் பயன் பெறுகிறது. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,
நாகப்பட்டினம் மாவட்டங்களில் முக்கிய தொழிலாக நெல் சாகுபடி உள்ளது. இங்கு
பருவத்திற்கு ஏற்ற வகையில் குறுவை, சம்பா, தாலடி வகைகள் பயிர்
செய்யப்படுகின்றன. குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி 12
லட்சம் ஏக்கரிலும் நடக்கிறது. புதுச்சேரியின் காரைக்கால் பகுதி, காவிரி
டெல்டாவில் உள்ளது. கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி., தண்ணீர்
கபினி நதி மூலமாக காவிரியில் கலப்பதால், கேரளாவும் காவிரிநீருக்கு உரிமை
கொண்டாடுகிறது.
வளம் பெருக்கும் திருநாள்:
"பெருக்கு'
என்றால் "பெருகுதல்' என்பது மட்டுமல்ல, "சுத்தம் செய்தல்' என்பதும் அதன்
பொருள். ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி வரும். சில
நேரங்களில் கரையையும் தாண்டும் நிலை கூட ஏற்படும். அப்போது ஆற்றில்
கிடக்கும் எல்லா அசுத்தங்களும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும்.
ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும். மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, தீய
எண்ணம், ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை பக்தி என்னும்
வெள்ளத்தை உள்ளே பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையும் பெருக்கு என்னும் சொல்
நமக்கு உணர்த்துகிறது. ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு
செல்வத்தை தரும் என்பது ஐதீகம். அதுபோல், மனமாசைக் கழுவி, உள்ளத்தில்
பக்தியை நிரப்பி வைத்து விட்டால் அன்பு பெருகி உலகமே திருந்தி விடும்.
நகை வாங்க கிளம்பலாமா!
அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த
நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும்
வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ,
அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர்.
ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால்,
ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.
மறக்காம கோலம் போடுங்க!
ஆடிப்பெருக்கன்று
மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து,
மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம்
செய்வாள்
No comments:
Post a Comment