பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம்
முழுவதும் 1,060 மையங்களில் நடந்தது. 2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் உள்பட 4
லட்சத்து 77 ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ் பாட கேள்விகள் தவிர
மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை
ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி
கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும்
பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதல்
தகுதித்தேர்வு 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு
சதவீதம்பேர் கூட தேர்ச்சி பெறவில்லை.தேர்வு நேரம் குறைவாக (1½ மணிநேரம்)
இருந்ததே தேர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் என்பது தெரிய வந்ததும் தேர்வு
நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2–வது
தகுதித்தேர்வு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதில் 3 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 3–வது தகுதித்தேர்வு ஆகஸ்டு 17,
18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
4 லட்சம் பேர் எழுதினர்
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று முன்தினம்
(சனிக்கிழமை) நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். 11,558 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்,
கணித பிரிவுகளில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பல
ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.இந்த நிலையில், பட்டதாரி
ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை உள்பட
தமிழகம் முழுவதும் 1060 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
நடந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.
இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதான கேள்விகள்
சென்னையில் வேப்பேரி சி.எஸ்.ஐ. பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி,
திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி, ஹெல்லட் மேல்நிலைப்பள்ளி,
சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, ரபேல் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு
மையங்களில் 24,782 தேர்வு எழுதினார்கள். 1,314 பேர் தேர்வில்
கலந்துகொள்ளவில்லை. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்களிடம்
கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த முறை தேர்வில் கேள்விகள்
எளிதாகவே இருந்தன. தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக
கேட்கப்பட்டன. இலக்கண பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகளை
கேட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் வேண்டுமானால் அந்த கேள்விகளுக்கு எளிதாக
விடையளித்து இருக்கலாம். மற்ற பாட ஆசிரியர்களுக்கு கடினம்தான். கல்வி
உளவியல் மற்றும் இதர பாடங்களில் கேள்விகள் எளிதாகத்தான் இருந்தன.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
ஆங்கில பாடத்தில் கேள்விகள் சுமாராக இருந்தன. மற்றபடி கடந்த
தகுதித்தேர்வுடன் ஒப்பிட்டால் இந்த தடவை தேர்வு எளிது என்றுதான் சொல்ல
வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்துதான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு
இருக்கின்றன. ஒருசில வினாக்கள் பிளஸ்–1, பிளஸ்–2 புத்தகங்களில் இருந்து
கேட்டுள்ளனர். விடையளிக்க நேரம் போதிய அளவில் இருந்தது.இவ்வாறு அவர்கள்
கூறினார்கள்.தமிழ் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாக பெரும்பாலான
ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இடைநிலை
ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்விலும் இதே கருத்தைத்தான் ஆசிரியர்கள்
கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்விகளை ஆய்வு செய்தபோது
ஓரளவுக்கு படித்தால்கூட 50 சதவீத மதிப்பெண் பெற்றுவிடலாம். எஞ்சிய 10 சதவீத
மதிப்பெண் எடுப்பதுதான் தேர்வில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக
அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் அதாவது 150–க்கு
90 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக
பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருப்பதால் இந்த ஆண்டு
தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கீ ஆன்சர்’ எப்போது வெளியிடப்படும்?
தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள்
எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம்? என்பதை துல்லியமாக
தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘கீ
ஆன்சர்’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ
ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்,
அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’
என்று தெரிவித்தனர்.
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண்
(150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப்
பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில்
தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான
பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி
ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண்,
பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில்
நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2
தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்
60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண்
ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–
12–ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்
பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்
No comments:
Post a Comment