தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனை வாக்கு சாவடி அமைவிடம், மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 5 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 296 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,28,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். வெளிநாடு வாழ் இந்தியர் பெயரை சேர்க்க 225 பேரும், பெயர் நீக்க 42,832 பேர், திருத்தம் செய்ய 2,86,208 பேர், தொகுதி விட்டு தொகுதி மாற 1,10,555 பேர் என மொத்தம் 20,68,420 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரம் கணினியில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று விசாரணையை மேற்கொண்டனர். அதையடுத்து புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடம், அந்தந்த மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள் மூலம் கட்சியினருக்கு இறுதி வாக்காளர் பட்டியல் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment