50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் 2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி பணி ஒதுக்கீடு ஆணை நேற்று 103 பேர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது. முதலில் ஏ.இளவரசன், எஸ்.ரேவதி, ஏ.கணேசன், எஸ்.சதீஷ், ஏ.பாபு, ஏ.கற்பகராஜா, எம்.முருகானந்தம் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கினார். அருகில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் இருந்தார். வருடாந்திர தேர்வு பட்டியல் நாளைவெளியீடு பின்னர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகள் விவரம், அந்த தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள், எந்த தேதி முதல் எந்த தேதிவரை விண்ணப்பிக்கலாம். எந்த தேதியில் எழுத்து தேர்வு ஆகிய அனைத்து விவரங்களும் கொண்ட வருடாந்திர அட்டவணை பட்டியல் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். நடந்து முடிந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கட்டமாக முடிந்து 103 பேர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை அவர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு வருவாய்த்துறை நடத்தும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிக்கான இடத்தை பெறலாம். தொடர்ந்து பிப்ரவரி 12-ந்தேதி வரை கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற உள்ளது. புதிய குரூப்-1 தேர்வு நடந்து முடிந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியிடப்படும். புதிதாக குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான காலிப்பணி இடம் விவரங்கள் இன்னும் துறைவாரியாக வந்து சேரவில்லை. ஏறத்தாழ 50 இடங்களுக்கு குரூப்-1 தேர்வு அறிவிக்கப்படும். உதவி வேளாண்மை அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் 447 உள்ளன. அதற்கான அறிவிப்பு வர உள்ளது. இதற்கு பிளஸ்-2 படித்துவிட்டு வேளாண்மை குறித்த டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள் இதை விண்ணப்பிக்க முடியாது. ஆனால் வேளாண்மை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அவர்கள் வேளாண்மை குறித்த டிப்ளமோ படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் வேதியியல் நிபுணர் பதவிக்கு காலிப்பணியிடங்கள் 3 மட்டுமே உள்ளன. இந்த பணிக்கு எம்.எஸ்.சி. வேதியியல் படித்திருக்க வேண்டும். இண்டஸ்ட்ரி வேதியியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment