தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் தலையீட்டின் விளைவாக, தனியார் பள்ளிகள் தமது முடிவை மாற்றிக்கொண்டன. அதேவேளையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளித் தாளாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தது போல் பள்ளிகள் மூடப்படாது. அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை (செவ்வாய்கிழமை) செயல்படாது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலாளர் டி.சி.இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. பாமக, திமுக உள்ளிட்டக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில்: "தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் இயங்கும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும்.
மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இருப்பினும், தமிழகம் உள்ள தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வர்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை தலையீடு:
உள்ளாட்சி இடைத்தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதால், விடுமுறை விடவேண்டாம் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பிடம் பள்ளிக் கல்வித் துறை பணித்தது.
இதன் தொடர்ச்சியாகவே, 'பள்ளிகள் மூடல்' என்ற முடிவை தனியார் பள்ளிகள் வாபஸ் பெற்றன. அதேவேளையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் போராடுவது என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment