தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 7-இல் விடுமுறை அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அன்றைய தினத்தில் தனியார் பள்ளிகள் இயங்குமா என்பதை பள்ளிக் கல்வித் துறை விளக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமானால் அந்தப் பள்ளியின் முதல்வர் தகுந்த காரணங்களை பள்ளிக் கல்வி அதிகாரிக்கு தெரியப்படுத்தி, அவரின் ஒப்புதலோடுதான் விடுமுறை அறிவிப்பை வெளியிட முடியும்.
அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்குநர்தான் அறிவிக்க முடியும்.
பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் விடுமுறையை அறிவிப்பார். அரசைத் தவிர தனியார் நடத்தும் சங்கத்துக்கு இவ்வாறு விடுமுறை அறிவிக்க உரிமையோ, அதிகாரமோ கிடையாது.
மேலும், உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் அக்டோபர் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க அரசைத் தவிர வேறு எவருக்கும் உரிமை கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். அன்றைய தினம் பள்ளிகள் இயங்குமா என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment