தமிழக மற்றும் குஜராத் மாநில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு அகமதாபாத்தில் நடைபெற்ற 'Capacity Building ' திட்டத்தின் கீழ் 'Shaala Darpan ' (பள்ளியின் கண்ணாடி / பிரதிபலிப்பு) என்ற தலைப்பிலான பயிற்சி பற்றிய அறிக்கை
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த அரசுப் பள்ளிகளிலும் இந்த நிலை தான் காணப் படுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க…
தரமான கல்வி வழங்குதல், பள்ளிகளில் நடைபெறும் செயல்பாடுகள் பற்றி பெற்றோர் மற்றும் சமூகம் உடனடியாக தெரிந்து கொள்ள வெளிப்படையான மின் ஆளுமை நிர்வாகம் மேற்கொள்ளல், பாடங்களை நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் என பள்ளி நடைமுறைகளை நவீனப் படுத்தி வெளிப்படையான மின் ஆளுமை திட்டத்தை நடைமுறை படுத்துவதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையின் முதல் நிலை தான் 'Shaala Darpan ' (பள்ளியின் கண்ணாடி / பிரதிபலிப்பு) திட்டம்.
''Shaala Darpan ' திட்டம் என்றால் என்ன?
ஒவ்வொரு பள்ளிக்கும் 'U-DISE' குறியீட்டு எண் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளியைப் பற்றிய அனைத்து தகவல்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள், மாணவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் இதற்கென தொடங்கப் பட்டுள்ள இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படும். இதற்கென தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது.
தகவல்கள் உள்ளீடு முடிந்தவுடன் மாணவரின் தினசரி வருகை/விடுப்பு விவரம் கணினியில் தினசரி பதிவு செய்யப் பட்டு பெற்றோருக்கு குறுஞ்செய்தியாக உடனே அனுப்பப் படும்.
இதுபோல பள்ளியில் அன்று நடத்தப் பட்ட பாடங்கள், வீட்டுப் பாடங்கள், ஆசிரியர்களின் வருகை விவரம் இவையும் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு அனுப்பப் படும்.
ஒவ்வொரு பருவ தொடக்கத்திலும் ஆசிரியர் பாடத் திட்டத்தினை மாதவாரியாக, வாரவாரியாக பகுத்து அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்வதன் மூலம் இந்தவாரம் பள்ளியில் குறிப்பிட்ட வகுப்புக்கு என்ன பாடம் கற்பிக்கப் படுகிறது என்பதை பெற்றோரும், சமுதாயமும் அறிந்து கொள்ள முடியும்.
பள்ளியில் நடைபெறும் இடைத்தேர்வு, பருவத்தேர்வு மதிப்பீடுகள் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப் படும். பள்ளி வேலை நாள்கள், விடுப்பு நாள்கள் என பள்ளி நடை முறைகள் அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டு, பெற்றோருக்கு குறுஞ்செய்தியாகவும், சமுதாயத்துக்கு இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கப் படும்.
ஒரு மாணவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், இதற்கென தொடங்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அங்கு மாநிலம், மாவட்டம், வட்டம்/ஒன்றியம் இவற்றை தேர்வு செய்து, பள்ளியின் பெயரை தேர்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பள்ளி பற்றியும், குறிப்பிட்ட வகுப்பை தேர்வு செய்வதன் மூலம் அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் பற்றியும், குறிப்பிட்ட ஒரு மாணவரை தேர்வு செய்வதன் மூலம் அந்த மாணவரின் தனிப்பட்ட விவரங்கள், கல்வி சார்ந்த முன்னேற்ற விவரங்களை பெற்றோரும், சமுதாயமும் தெரிந்து கொள்ள முடியும். இது மட்டுமல்ல, ஆசிரியர்களின் விவரங்களையும், சிறப்பு தன்மைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
காலை 10 மணியளவில் குறிப்பிட்ட பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர்? எவ்வளவு மாணவர்கள் வந்துள்ளனர்? என்ற விவரங்களை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு பள்ளி செயல்பாடுகளை, மின் ஆளுமை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படையாக்குவதன் மூலம், கற்றல்-கற்பித்தல் செயல்பாடு சிறப்பாக நடைபெறும், அரசுப் பள்ளிகளின் தரம் உயரும், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என நம்பப் படுகிறது.
இந்த திட்டம் இந்தியாவில் முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்வு செய்யப் பட்ட பள்ளிகளில் நடைமுறை படுத்தப் படவுள்ளது.
தமிழகத்தில் 5771 பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இப்பள்ளிகளுக்கு இதற்கென அனைத்து தொழில் நுட்ப வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட உள்ளன.
'Shaala Darpan ' திட்ட பயிற்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து தலா 40 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதன்படி தமிழகத்திலிருந்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சார்பாக கணினியில் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி 25.07.2014 அன்று முற்பகல் 9.00 மணிக்கு தொடங்கியது. 6 குழுக்களாக பிரிந்து செயல்திட்ட அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு குழுவாக வந்து தங்கள் அறிக்கையை பவர் பாயிண்ட் விளக்கத்துடன் சமர்பித்தனர்.
பின்னர் கேரளப் பள்ளிகளில் பாடங்களை கற்பிப்பதில் தகவல் தொழில் நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பது பற்றி அந்த மாநிலத்திலிருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் முனைவர்.திரு.பாபு செபஸ்டின் அவர்கள் பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார்.
கர்நாடகாவிலிருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் திருமதி.கீதா அவர்கள் கர்நாடகப் பள்ளிகளில் தரமான மதிப்பீடு என்பது பற்றி பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார்.
பின்னர் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலை 5 மணிக்கு பயிற்சி இனிதே நிறைவுற்றது.
தமிழக ஆசிரியர்களை தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஜெயச்சந்திரன் மற்றும் திரு.சேகர் ஆகியோர் பொறுப்பாக அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment