கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?
அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட ஒரே பட்டியலுக்குள் வரும் சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணம் ஆகாது. மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.
கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டியசான்றுகள் என்ன?
கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற என்ன சான்று வழங்க வேண்டும்?
முன்னாள் படைவீரர் வாரிசு சான்றிதழ் 2 நகல், குடும்ப அட்டை சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல்களில் சான்றொப்பம் தேவை.
மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற பதிவு செய்ய வேண்டிய சான்றுஎன்ன?
குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு விண்ணப்பம் செய்யும்மனு ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி என்பதற்கான தேசிய அடையாள அட்டையில் சான்றொப்பம் தேவை.
வேறு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது வேலைவாய்ப்பு பதிவை மாற்ற முடியுமா?
வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட குடிப்பெயர்ச்சி சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment