தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழில் 5 ஆயிரம் சொற்களை பிழையின்றி, எழுத மற்றும் வாசிக்கும் வகையில் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாணவ, மாணவிகள் தமிழை பிழையின்றி எழுத, வாசிக்க கற்றுக் கொள்வதற்கு கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
மொழியை முழுமையாகத் தெரிந்து கொள்ளும்போது தான், மாணவர்கள் பிற பாடங்களையும் ஆழமாக கற்றுக் கொள்ள முடியும். எனவே, தொடக்கப் பள்ளியிலேயே மாணவர்களிடம் தமிழ் வாசிப்பு, எழுத்துத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
அதன்படி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5ஆம் வகுப்பு பயிலும் போது குறைந்தபட்சம் 5 ஆயிரம் தமிழ் சொற்களை படித்து, புரிந்து கொள்ளும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மாணவர்களுக்கு ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து, சொற்றொடர், சிறுதொடர் என்று படிப்படியாக தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சொற்களை பிழையின்றி வாசித்தல், எழுதுதல் என்று மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் முறையாகப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்பம்சமான ல, ழ, ள எழுத்துக்களை சரியாக உச்சரித்தல், வ மற்றும் ல எழுத்துகளின் வடிவத்தை அதற்கேற்ற முறையில் எழுதுதல் போன்றவற்றின் அவசியம் குறித்தும் விளக்கி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மேலும், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல் விளையாட்டு நடத்தவும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.
இதற்காக முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment