தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ.,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், 550 பொறியியல் கல்லூரிகள்
உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களை, கலந்தாய்வு மூலம், அண்ணா பல்கலை நிரப்ப உள்ளது. இதற்காக,
நாளை, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 56 இடங்களில்,
விண்ணப்பங்கள்
வழங்கப்பட உள்ளன. 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அனைத்து வினியோக
மையங்களுக்கும், பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும்,
விண்ணப்பம் வழங்கப்பட்டாலும், பல்வேறு இடங்களில் இருந்து, அதிகமான மாணவ,
மாணவியர், சென்னை, அண்ணா பல்கலைக்குத் தான் வருவர். இதனால், இங்கு,
ஐந்துக்கும் அதிகமான, 'கவுன்டர்'கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை,
குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லூரியிலும், விண்ணப்பம் வழங்கப்படும். அனைத்து
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட, பல
மையங்களில், விண்ணப்பம் வழங்கப்படுகிறது.எஸ்.சி., எஸ்.டி., மற்றும்
அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர், உரிய சான்றிதழின் நகலை
காட்டி, 250 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். இதர பிரிவினர், 500
ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெற வேண்டும். இது குறித்த முழுமையான
விவரங்களை, இன்று வெளியாகும் அறிவிப்பில், மாணவர்கள் பார்க்கலாம்.
No comments:
Post a Comment