வாக்குப் பதிவு முடிந்த பிறகு, செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வாக்குப் பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள க்ளோஸ் பொத்தானை அழுத்தி அந்த இயந்திரத்தை மூட வேண்டும். ஆனால், அவ்வாறு பொத்தானை அழுத்தி உரிய முறையில் இயந்திரத்தை மூடாமல் இருப்பதாகவும், அது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கடந்த தேர்தல்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தேர்தலைச் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வழி செய்திடும் வகையில் வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை தொடர்பாக சிலவழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளை வாக்குச் சாவடிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வாக்குப் பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள க்ளோஸ் பொத்தானை வாக்குச் சாவடிகளில் உள்ள வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அழுத்தி இயந்திரத்தை மூட வேண்டும். பொத்தானை அழுத்தாமல் இயந்திரத்தை மூடக் கூடாது. வாக்குப் பதிவு செய்யும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய படிவம் 17 ஏ-வை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். வாக்குப் பதிவு முடிந்தவுடன், இறுதியாக வாக்கினை பதிவு செய்த வாக்காளரின் விவரத்துக்குக் கீழ் ஒரு நீண்ட கோட்டை (அதாவது வாக்குப் பதிவு முடிந்தது என்பதை தெரிவிக்க) இட வேண்டும்.
அதன்பிறகு அந்தப் படிவத்தில், கடைசியாக பதிவு செய்த வாக்காளரின் வரிசை எண்ணைத் தெரிவித்து அதற்குக் கீழே அனைத்து வேட்பாளர்களின் முகவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-ஐ, சான்றொப்பமிட்டு அனைத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் வழங்க வேண்டும். அந்தப் படிவங்களை முகவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வாக்குச் சாவடி அதிகாரிகள் அவற்றை அளிக்க வேண்டும் என்று பிரவீண்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment