இந்தியாவில் முதல் முறையாக திருச்சியில் புத்தகமில்லா புதிய கல்வி முறை நடிகர் சூர்யாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சி கே.கே. நகரிலுள்ள ஆல்பா பள்ளியில்
நடைபெற்ற 20வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா
மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில்
எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட் மூலம்
கல்வி கற்கும் 'ஐசோன்' என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐசோன் என்ற இந்த கல்வி முறையானது தரமான,
நுண்ணியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முறையாகும். ஒவ்வொரு மாணவரின்
தேவைகளையும், திறமைகளையும் பூர்த்தி செய்வதாகவும், கையடக்கமாக அவரவர் கல்வி
நிலைக்கு ஏற்ப இப்புதிய கல்வி முறை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்
படி பாடபுத்தகங்களில் இருக்கும் பாடங்கள் அனைத்தும் மின்னணு சிறுபலகையான
டேப்லெட்டில் பதிவு செய்யப்படுவதோடு பாடங்கள் தொடர்பான படக்காட்சிகள்
மற்றும் குறிப்புகளும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மாணவர்களுக்குத் தேவையான 18 கல்வி வலைதள
நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இணைப்பு
வழங்கப்படும். மாணவர்களுக்கு தேவையான பாடகுறிப்புகளை அவர்கள் வீட்டிற்கு
எளிதாக எடுத்துச் செல்வதோடு அதிகப்படியான புத்தக சுமையும் குறையும்.
இப்பள்ளியில் வரும் 2014-15ஆம்
கல்வியாண்டிலிருந்து 'ஐசோன்' கல்வி முறையில் படிக்க விருப்பம் தெரிவித்து,
இதுவரை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். புதிய
கல்வி முறையில் இணையும் மாணவ மாணவிகளுக்கு தனி வகுப்புகளின் மூலம்
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரிய ஆசிரியைகளால் வகுப்புகள்
நடத்தப்படும்.
இப்புதிய கல்வி முறை புத்தகச் சுமையை குறைக்கும் என்பதால், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment