ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி
ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான
நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும்
வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் -அமைச்சருக்கு கோரிக்கை
விடுக்கப் பட்டு உள்ளது.
கோரிக்கை மனு
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர்
சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்
கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை வரவேற்கிறது. தனியார்
பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி
நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முழு ஆண்டு தேர்வுகள்
தற்போது தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தி முடித்து,
திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய நிலையில் பள்ளி
நிர்வாகமும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து விடைத்தாள்
திருத்தம், தேர்வு முடிவுகள் அறிவித்தல், மாணவர்கள் இடமாற்றம், புதிய
மாணவர்கள் சேர்க்கை என்று அனைத்து பள்ளி சார் நிகழ்வுகளும் மார்ச், ஏப்ரல்,
மே மாதங்களில்தான் நடைபெற வேண்டி உள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து
ஆசிரியர்களும் பள்ளிகளில் பணியில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அரசு
அறிவிப்பு மற்றும் பணி நியமனத்தின் காரணமாக ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில்
இருந்து இடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாண வர்கள் மற்றும் பள்ளி
நிர்வாகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
மே மாத இறுதியில்
எனவே புதிய ஆசிரியர்கள் நியமன ஆணைகள் மற்றும் பணியில் சேரும் காலம் ஆகியவை
மே மாத இறுதியில் உள்ளவாறு அமைந்தால் தனியார் பள்ளி மாணவர்களின் நலன்
பாதுகாக்கப்படும். அத்துடன் தனியார் பள்ளி நிர்வாகங்களின் சிரமங்களும்
தவிர்க்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment