விழுமின்...எழுமின் உழைமின் !
வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த
அடையாளம். 150-ம் ஆண்டு பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரின்
வாழ்க்கை தரும் உன்னதமான பாடங்களில் சில...
கேள்வி கேள்: இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். 'கரடி மோதிரம்
போட்டால்,
செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, 'அதை
விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?' என்று கேட்டார் அம்மா. 'எதையும்
பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர்.
உன்னை நம்பு: ஒருநாள்
குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி
நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். 'தன்னை நம்ப
வேண்டும்’ என்று உணர்ந்தார். 'கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய
மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.
பயணம் செய்:
வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர்.
மைசூர் அரசர், ''என்ன உதவி வேண்டும்?'' என்று கேட்டபோது...
''திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்'' என்றார். அவர்
சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில்
தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.
அன்பு செய்: 'சக
மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக,
'ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். 'உதவி வேண்டுபவர்களுக்கு
உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை
ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.
வாசிப்பை நேசி:
வேதங்கள், உலக இலக்கியங்கள், பைபிள் என்று ஓயாமல் வாசிப்பார். பிரிட்டானிகா
கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்துவிட்டார். அதில் எந்தக் கேள்வி
கேட்டாலும் பதில் சொல்லி அசத்தினார் விவேகானந்தர்.
தேசம் காத்தல் செய்: தேசத்தின்
பெருமைக்கும் அதன் உச்சத்துக்கும் உழைக்க, இளைஞர்களுக்கு அறைகூவல்
விடுத்தார். 'விழுமின், எழுமின்... எழுமின், விழுமின்... குறிக்கோளை அடையக்
குன்றாமல் உழைமின்’ என்கிற தாரக மந்திரத்தைத் தந்தார். 'ஆங்கிலேயர்கள்
என்னைக் கைதுசெய்து சுடட்டும். தேசத்தின் பெருமைக்காக, எந்த வகையான
தியாகமும் செய்யலாம்' என்று முழங்கினார்.
உடலினை உறுதி செய்:
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருந்தார் விவேகானந்தர்.
நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகினார். 'இளைஞர்கள்,
உடல் மற்றும் உள்ளத்தின் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்பது அவரின்
முக்கியமான அறிவுரை.
இலக்கே முக்கியம்:
கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச்
சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி
தவறாமல் சுட்டார். 'இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும்
பரிசில் கவனம் செலுத்தினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்'
என்றார்.
அன்பால் வெல்க: அமெரிக்காவின்
சிகாகோ நகரில் அன்பு பொங்க, ''சகோதர சகோதரிகளே!' என்றதும் அவையே எழுந்து
நின்று கைதட்டியது. 'உங்களை மாதிரி அறிவாளியும் என்னை மாதிரி அழகியும்
திருமணம் செய்துகொண்டால், அற்புதமான மகன் பிறப்பான்' என்று பெண் ஒருவர்
சொன்னபோது, 'என்னையே தங்களின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே!' என்றார்
விவேகானந்தர்.
எளியோர் நலம் போற்று:
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள் என்று எல்லாருக்காகவும்
குரல்கொடுத்தார். 'தீண்டாமையை நீக்காவிட்டால், இந்து மதம் காணாமல்
போய்விடும்’ என்றார். 'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர்
அநாதையின் வயிற்றில் கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடமோ, மதத்தின் மீதோ
எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று தைரியமாகச் சொன்னார்.
No comments:
Post a Comment