மாணவ–மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் கவுன்சிலிங் மையத்தை
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தொடங்கி வைத்தார். ஆலோசனை
மையம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் மன அழுத்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு
காணும் வகையில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது. அதன்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
சார்பில் 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்
(கவுன்சிலிங் சென்டர்) தொடங்கப்பட்டு உள்ளன. ஒரு உளவியல் ஆலோசகர் தலைமையில்
செயல்படும் இந்த மையத்தில் மாணவ–மாணவிகள் அமர்ந்து ஆலோசனை கேட்கும்
வகையில் ஒரு வேனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தொடங்கிவைத்தார்
இதன் தொடக்கவிழா நேற்று ஈரோடு அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர்
வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார்.
அனைவருக்கும் கல்வி இயக்க இணை
இயக்குனர் சசிகலா, செயல்வழிக்கற்றல் திட்ட மாநில
ஒருங்கிணைப்பாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா கலந்து கொண்டு நடமாடும் கவுன்சிலிங்
மைய செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
படிக்க வேண்டும்
தமிழக முதல் –அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவ–மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றி
வருகிறார். பட்ஜெட்டில் ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி, மாணவ–மாணவிகள் பயன்பெறும் 14 வகை திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இவை எல்லாம் மாணவ–மாணவிகளாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். இந்தியா
முன்னேறவேண்டும். நமது மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்போது 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்கள் மாணவ–மாணவிகளின் பிரச்சினைகளை போக்கும்.
தீர்வு
ஆசிரியர்கள், பெற்றோர்கள், தோழர்–தோழியர்களிடம் பேச முடியாத மன அழுத்தங்களை நீங்கள் இதற்காக
நியமிக்கப்பட்டு இருக்கும் ஆலோசகரிடம் கூறினால், உங்களுக்கு அதில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு வர உதவி செய்வார்கள்.
நீங்கள் மனம் திறந்து பேசி, நல்ல தீர்வினை, உடனடி தீர்வினை அடையலாம்.
விரைவில் அரசு பொதுத்தேர்வுகள் வர
உள்ளன. இந்த தேர்வுகளை பயம், குழப்பமின்றி அணுகி நன்றாக எழுதுங்கள்.
தமிழகத்தில் கல்வியில் சிறந்த மாவட்டமாக உங்கள் மாவட்டம் வர நன்றாக படியுங்கள்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளர் சபிதா கூறினார்.
உயர்பதவிகள்
விழாவில் மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை ஆய்வுக்குழு சார்பில் வந்திருந்த பேராசிரியை சோபிதா ராஜகோபால்
பேசும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா
காந்தி உண்டு–உறைவிட பள்ளிக்கூடங்கள் பற்றி ஆய்வு
செய்ய வந்திருக்கிறேன். பள்ளிக்கூடங்கள் சிறப்பாக உள்ளன. அதிலும் அங்குள்ள
மாணவிகள் நன்றாக உள்ளனர். இது நல்ல அனுபவமாக உள்ளது. மாணவிகளாகிய நீங்கள் சிறப்பாக
படித்து சாதனைகள் செய்ய வேண்டும். உயர்ந்த நிலையை அடைய வேண்டும்’ என்றார்.
யுனிசெப் நிறுவன பிரதிநிதி
சுவேதாசாண்டில்யா பேசும்போது, ‘பெண்கள்தான் ஆக்கசக்தி. உங்களால்
எதுவும் செய்ய முடியும். எனவே நீங்கள் நிறைய நல்ல விஷங்களை செய்ய வேண்டும். நன்றாக
படித்து, உயர் பதவிகளில் வரவேண்டும்’ என்றார்.
விழாவில் பயிற்சி துணை கலெக்டர்கள்
பரிதா பானு, சந்தோஷினி, தாசில்தார் சாகுல் அமீது, அனைவருக்கும்
கல்வி இயக்க மேற்பார்வையாளர் ரமணி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுசீலா உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரி அய்யண்ணன் வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி
சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
முன்னதாக ஈரோடு வந்த முதன்மை செயலாளர்
சபிதா ஈரோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகதத்தில்
ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம்,
மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமார் மற்றும் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
நடமாடும் ஆலோசனை வாகனம் ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கு அந்ததந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் வழிநடத்துதலின் பேரில் சென்று வரும்.
No comments:
Post a Comment