அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா"
திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ,
பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும்,
ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற
விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில்
மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க்
போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு
வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால்
உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம்,
பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம்
தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம்
முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட
உள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு
ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப்
பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.மத்திய அரசு
திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன்
செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய
தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரு பள்ளிகளில் பத்தாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட
விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து
வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம்
விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள
அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு
திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment