தமிழகத்தில் அரசு - தனியார் ஒத்துழைப்பில் மத்திய அரசு தொடங்கவுள்ள மாதிரிப் பள்ளிகளால் கல்வி வணிகமயமாகும் என்று பொதுப் பள்ளிக்கான
மாநில மேடை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது: மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு - தனியார்ஒத்துழைப்பு அடிப்படையில் நாடு முழுவதும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் மத்தியஅரசே பின்தங்கிய வட்டங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது.இந்தத் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் புதிதாக அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்வியில் பின்தங்கிய பகுதிகள் தவிர மேம்பட்ட பகுதிகளிலும் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இந்த அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத பகுதிகளில் 356 மாதிரி பள்ளிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மத்திய அரசு நேரடியாக அதன் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஏற்புடன் இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது.இந்தப் பள்ளிகளில் 40 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 60 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகிறது. இந்த 60 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்துக்கு எந்தவித முறைப்படுத்தலும் கிடையாது. தமிழக அரசின் கட்டண நிர்ணயச் சட்டம் இந்தப் பள்ளிகளுக்கு பொருந்துவதும் கேள்விக்குள்ளாக்கப்படும்.மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக தனியார்-அரசு ஒத்துழைப்பு என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தையும், வணிகமயத்தையும் அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே அரசு-தனியார்ஒத்துழைப்பு மாதிரி பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி மத்திய அரசே நேரடியாக தமிழகத்தில் தொடங்குவதற்கு மாநில அரசு தனது ஆட்சேபத்தை உடனடியாக தெரிவிக்கவேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment