ஆசிரியர்குடும்பம் அனைவருக்கும் திருவோண வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
மகாபலி மன்னனின் வரலாறு:
ஒருமுறை சிவாலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உதவி செய்தது ஒரு எலி. ஆகவே அந்த எலிக்கு, மூன்று உலகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலி, மறு பிறப்பில் மகாபலி என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி, மூன்று உலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. மகாபலி மன்னனின் ஆட்சி, தங்கமான ஆட்சி என புகழப்பட்டது. மக்கள் எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வேகமான வளர்ச்சியை கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். இந்த போரில் அசுர குலம் வெற்றி பெற்றது. பயந்து போன தேவர்குலத்தினர், திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைவதற்காக, காசிப முனிவரின் மனைவி திதி வரம் கேட்டாள். அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுரனாக இருந்தாலும், தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான்.
அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்கு சென்று, தான் தவம் செய்வதற்காக, மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால்தான் என்பதை அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், தானம் வழங்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என, மகாபலியை தடுத்தார். ஆனால் இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன், குரு கூறியதையும் கேட்காமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து வழங்கினார். மூன்றாவது அடிக்கு இடமில்லாததால், தன் தலை மீதே மூன்றாவது அடியை அளக்குமாறு கூறி, தன் தலையை தாழ்த்தி காண்பித்தார். அதன்படி மன்னனின் தலையின் மீது கால் வைத்து அழுத்த, மகாபலி மன்னன் பாதாள லோகத்துக்குள் சென்றான். அப்போது, மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிட்ம் தான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்களை காண அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு வாமனனும் வரம் அளித்தார். இதன்படி தன் மக்களை காண, மகாபலி சக்ரவர்த்தி வரும் நாளே, ஓண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தங்கள் மனம் கவர்ந்த மன்னன் மகாபலியை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண்பிப்பதற்காகவும்தான் கேரள மக்கள் வீட்டு வாசலில் பூக்களால் கோலமிட்டு, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
ஓண சத்யா:
ஓணம் என்றாலே கேரள மக்கள் நினைவில் வருவது சத்யா எனப்படும் விருந்துதான். இலையில் பரிமாறப்படும் தோரன், காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட வகைகளை சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். முதலில் சாதத்தில் பருப்புடன் நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்பர். இதன் பின் சாம்பார் ஊற்றி, காய் கூட்டு வகைகளை சேர்த்து சோறு உண்பர். அடுத்ததாக அடப்பிரதமன் பாயசத்தை சுவைப்பர்.
No comments:
Post a Comment