scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 24, 2013

செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.

2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நாம் மறந்திருக்க முடியாது. இயற்கையின் முப்பது வினாடி சீற்றத்தால் குஜராத் மாநிலம் துவண்டு போனபோது அங்கு துயர் துடைப்பிற்காக விரைந்து வந்த முதல் அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். அந்த குஜராத் பூகம்பத்திற்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர் உன்னத அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 


1828-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் டுனாண்ட். பெற்றோர்கள் மதபற்று கொண்டவர்களாக இருந்ததால் இயற்கையிலேயே டுனாண்டும் மதபற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறிய அவர் சிறிது காலம் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். 26 வயதானபோது அவர் வர்த்தகத் துறையில் அடியெடுத்து வைத்தார். அல்ஜீரியாவுக்கு (Algeria) சென்று சுவிஸ் காலனியான Setif என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அதில் விவசாயம் செய்தும், பண்ணை நடத்தியும் தன் தந்தையைப் போல் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த பண்ணைக்குத் தேவையான தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வரவேண்டியிருந்தது. பக்கத்திலிருந்த நிலப்பகுதியோ பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதி எனவே அங்கு குழாய் போட பிரெஞ்சு அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது.

பலமுறை பிரெஞ்சு அதிகாரிகளை சந்தித்தும் பலன் கிட்டாததால் அப்போது பிரான்சை ஆண்டு வந்த மன்னன் மூன்றாம் நெப்போலியனை நேரில் சந்தித்து அனுமதி பெற முடிவெடுத்தார் டுனாண்ட். அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த சமயம் ஆஸ்திரிய படைகளை இத்தாலியிருந்து துரத்தியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது பிரெஞ்சு இராணுவம். அந்த இராணுவத்தை வழி நடத்தி போரில் ஈடுபட்டிருந்தார் மூன்றாம் நெப்போலியன். இத்தாலியில் அமைந்திருந்த நெப்போலியனின் போர்த்தலைமையகமான  Solferino முகாமுக்கு நேரடியாக சென்றார் டுனாண்ட். நெப்போலியனை சந்திக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்று நம்பியதால் தன்னுடன் நிறைய பணத்தையும் அவர் கொண்டு சென்றிருந்தார் அந்த ஆண்டு 1859. போகும் வழியிலேயே போரின் அவலங்கள் அவரின் கண்களில் பட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன, பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன. எப்படியோ ஒரு மாட்டு வண்டி துணையுடன் Solferino-க்கு அருகிலுள்ள  Castiglione என்ற சிற்றூரை அடைந்தார்.

அந்த சிற்றூரிலிருந்த ஒரு மலை உச்சியிலிருந்து அவர் கண்ட காட்சிகள் அவரை கலங்கடித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக மூர்க்கமான போர்களில் ஒன்றை அவர் நேரடியாக கண்ணுற்றார். போர்க்களத்தில் பத்தாயிரம் பேர் மடிந்தனர் பதினைந்தாயிரம் வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அவலங்களைக் கண்ட டுனாண்டுக்கு வந்த வேலை மறந்து போனது மனிதநேயம் பீறிட்டு எழுந்தது. காயமடைந்த வீரர்களில் சுமார் 500 பேர் அந்த சிற்றூரிலிருந்த தேவலாயத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு விரைந்த டுனாண்ட் எந்தவித மருத்துவ அனுபமும் இல்லாதிருந்தும்கூட முதலுதவி செய்து காயங்களை சுத்தம் செய்யத்தொடங்கினார். அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க சொன்னார். இறக்கும் தருவாயில் இருந்த வீரர்கள் கூறிய விபரங்களை எழுதி வைத்துக்கொண்டு அந்தந்த குடும்பங்களுக்கு செய்திகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தான் கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து உணவு ஏற்பாடு செய்ததோடு இன்னும் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்த்தார். 

ஒருமாதம் அங்கேயே தங்கி வீரர்களை கவனித்தார் டுனாண்ட். இறுதியில் நூறு வீரர்கள் மடிந்தனர், நானூறு வீரர்கள் அவரது முயற்சியால் குணமடைந்து இல்லம் திரும்பினர். பின்னர் சுவிட்சர்லாந்து திரும்பிய டுனாண்டுக்கு தன்னுடைய அல்ஜீரியா பண்ணைப் பற்றி முற்றிலும் மறந்து போனது. இரவு பகலாக போர்க்காட்சிகளே அவர் கண்முன் தோன்றின. எத்தனைப் போர்க்களங்களில் எத்தனை வீரர்கள் கவனிப்பின்றி இறந்திருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார். இனி எதிர்காலத்தில் உலகில் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும் அதில் காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்ற ஓர் அனைத்துலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். போரில் தான் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் Solferino- நினைவுகள் எனும் தலைப்பில் நூலாக எழுதினார்.  

போரில் காயமடையும் எந்த தரப்பு வீரருக்கும் பாகுபாடின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களும், தாதியர்களும் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும். போர்க்காலத்தின்போது உதவ பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். டுனாண்ட் அச்சிட்டு வெளியிட்ட அந்த நூலில் முதல் இரண்டு பதிப்புகள் விரைவாக விற்று தீர்ந்தன. அதனால் ஊக்கம் பெற்ற டுனாண்ட் அடுத்த பதிப்பில் தனது கோரிக்கையை விரிவுபடுத்தினார். அதன்படி போர்களின்போது மட்டுமின்றி எந்த ஒரு நாட்டில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் அங்கு நேரடியாக நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார்.  

பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஆதரவு திரட்டினார். அவரது அயராத உழைப்பால் 1864-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் பனிரெண்டு நாடுகள் கூடி ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டன அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது. அந்த சங்கம் சுவிட்சர்லாந்தில் உருவானதால் அந்த நாட்டுக்கொடியின் வண்ணங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே செஞ்சிலுவை சங்கத்தின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த சங்கத்தின் தோற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது சொத்தையெல்லாம் செலவழித்து மிகுந்த எழ்மைக்குள்ளானார் டுனாண்ட். உலகிற்கு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிக்கொடுத்தும் அவரிடம் பணம் இல்லாமல் போனதால் உலகம் அவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனது. சில சமயங்களில் அடுத்த வேளை உனவுகூட இல்லாமல் அவர் சிரமப்பட்டதாக சில வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. 

சுமார் முப்பது ஆண்டுகள் ஒதுங்கியே வாழ்ந்த அவரை 1895-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஒரு பத்திரிக்கையாளர். அதன்பிறகு 1901-ஆம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கி கெளரவித்தது நோபல் குழு. தாம் ஏழ்மையில் இருந்தபோது கூட அந்த நோபல் பரிசுத்தொகையை பயன்படுத்தவில்லை. தன் மரணத்திற்கு பிறகு அந்த பரிசுத்தொகையில் ஒரு பாதியை சுவிட்சர்லாந்து ஏழைகளுக்கும், மறு பாதியை நார்வே ஏழைகளுக்கும் கொடுத்து உதவ ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வாழ்நாளின் இறுதிவரை பிறரது நலனையே விரும்பிய அந்த உன்னத மனிதரின் உயிர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் அவரது 82-ஆவது அகவையில் பிரிந்தது.    

இன்று செஞ்சிலுவை சங்கம் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது. துயர்துடைப்பு என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் அமைப்பு செஞ்சிலுவை சங்கமாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் டுனாண்டின் பிறந்த தினமான மே எட்டாம் நாள் செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது. ஜீன் ஹென்றி டுனாண்ட் வரலாற்றில் இவ்வுளவு பெரிய சுவட்டை பதிக்க முடிந்ததற்கு காரணம்  மனுக்குலத்தின் இன்னல்களை களைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையும், துயர்துடைப்பிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மனிதநேயமும், தடைகளை கண்டு துவண்டு போகாத மனோதையரியமும்தான். டுனாண்டைப் போன்று உயரிய சிந்தனைகளோடு மனிதநேயமும், மனோதைரியமும் இணையும் போது நம்மாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த முடியும். 


Read more: http://urssimbu.blogspot.com/2013/08/jean-henri-dunant-historical-legends.html#ixzz2lXgvbRxG

No comments:

Post a Comment